Search This Blog

"பால்வீதியில் ஆலாபனை" - கவிக்கோ அப்துல் ரஹ்மான் பற்றிய சிறப்பு பதிவு


"எழிலன்னை ஆட்சியடா! -அது
எங்கெங்கும் காணுதடா!
பொழிலெங்கும் பாடுகிறாள் -புதுப்
பூக்களில் புன்னகைத்தாள்
மாலை மதியத்திலும் -அந்தி
மந்தார வானத்திலும்
சோலையின் தென்றலிலும் -சுக
சோபனம் கூறுகிறாள்
மலைகளின் மோனத்திலே- அந்த
வானவில் வண்ணத்திலே
அலைகளின் பாடலிலே -அவள்
அருள் பொங்கி வழியுதடா! "

-கவிக்கோ

ஒன்பது வயதில் தனது முதல் கவிதையை எழுதினார் அப்துல் ரகுமான். அந்த கவிதைதான் மேலே தரப்பட்டுள்ளது.

'எல்லாக் கலை வடிவங்களும் மக்களுக்கானதே'
என்ற கொள்கையில் தீவிரம் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ்க் கவிதை வடிவத்தை வளப்படுத்திய வானம்பாடிஇயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழுக்கு அரிய பல இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்தவர். வெறும் படைப்பாளியாக மட்டுமில்லாமல், அரசியலிலும், சமூக பிரச்னைகளிலும் தம் கவிதையோடு களத்தில் நின்றவர்.

தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். இன்று நாம் எழுதும் புதுக் கவிதைகளின் முன்னோடி.
தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

தனக்கென இயல்பானதொரு மொழிக்கட்டை கட்டமைத்துக்கொண்டு, தனது வெளியில் சமரசமில்லாமல், எவ்வித விசாரணைகளுக்கும் தலை வணங்காமல் ஆகப்பெரும் படைப்புகளை எழுதிக் குவித்த அந்த மகா கவிஞன், 2.6.2017 அதிகாலை 2 மணி அளவில் இயற்கையில் கலந்து விட்டார்.

தமிழின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமானை காலம் பறித்துக் கொண்டுவிட்டது.

தனிப்பட்ட முறையில் அன்னாரின் மறைவு எனக்கொரு பேரிழப்பாகவே அமைந்தது! அறியாத வயதிலேயே கவிதைகள் மீது ஒரு ஆர்வத்தை அவரது கவிதைகளே கொண்டுவந்தன! அதனாலோ என்னவோ பொதுவில் எந்த ஜீனியஸையும் சந்திக்கவிரும்பாத நான் அன்னாரை சந்திக்க விரும்பினேன். என்னால் முடிந்தது அவரது மறைவுக்கு ஒரு கட்டுரையும் சமர்ப்பனமாய் ஒரு கவிதையும்தான்!

கவிக்கோ மதுரையில் 1937ம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள் என்பதால் இலக்கிய ஆர்வம் இயல்பாகவே இருந்தது.

தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட அப்துல் ரகுமான், கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவர் சமஸ்கிருதமும் பயின்றவர்.

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்த் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றியுள்ளார்.
அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாகவும் இவர் விளங்கினார்.

கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இவரின் முதல் கவிதை தொகுப்பு பால்வீதி' 1974ஆம் ஆண்டு வெளிவந்தது.

இவர் 1999ஆம் ஆண்டு எழுதிய 'ஆலாபனை' கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருது வென்றது. .

ஆலாபனை தொகுப்பிலிருந்து எனக்கு மிகப் பிடித்த கவிதை :

கண்ணீரின் ரகசியம்

"இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடுஎன்று
பிரார்த்தித்தேன்

அவன் கண்ணீரைத் தந்தான்

வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே
என்றேன்

இறைவன் கூறினான்:

 மழை வேண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு என்று
எந்த உழவனாவது கேட்பானா

ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்

கண்ணீரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை நீ அறிய மாட்டாய்

உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்

வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை நீ கண்டதில்லையா?

புன்னகை தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!

மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?

கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?

முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம்தானே  அது

கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!

மேலும் கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது

புன்னகையோ சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது"


சீதையின் அழகை கம்பன் படலம் படலமாக வடித்துச் சொன்னான்.
கவிக்கோ அதனை இரண்டே வரிகளில் எடுத்துச்  சொன்னார்.

ராவணன் சொல்கிறானாம்:
"இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?"
அற்புதம்!



இனிய உதயம் என்ற இலக்கிய இதழில் அப்துல்ரகுமான் எழுதிய

"அரசு ஊழியர்களே! அரசு ஊழியர்களே!
அஞ்சி அஞ்சி லஞ்சம் வாங்கும்
அரசு ஊழியர்களே!
உங்களுக்கோர் நற்செய்தி; இனிமேல்
அஞ்சாமல் வாங்குங்கள்;
சட்டமே அனுமதிக்கிறது!"

என்ற கவிதையை ரசித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் திமுக தலைவர் கருணாநிதி.


கவிக்கோவிற்கு சினிமா பிடிக்காது. குத்துப்பாட்டைக்கூட குத்திக்காட்டுகிறார் கவிதையில் இவ்வாறு...

பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம்; திரைப்படத்தில்..
குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம்



தமிழனைப் பார்த்து வேதனைப்பட்டார் கவிக்கோ

“உன் சிலம்பம் அதிகாரம் செய்தது அன்று – இன்றோ
அதிகாரக் கால்களில் சிலம்பாகி கிடக்கிறான் தமிழன்” 

என்றார்….!


இன்றைய தமிழ் நாட்டின் நிலைமையை அன்றே நாசுக்காய் கணித்துச் சொன்னார்.

“கங்கைகொண்டவன்தான் இன்று 
காவிரியையும் இழந்துவிட்டு 
கையைப் பிசைந்து நிற்கிறான்” 


பாவம் பாரதி என்ன செய்தானோ? அவனையும் கலாய்த்தார்.

“தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வோம் என்ற பாரதியே!
வந்து பார் இப்போது தமிழ் தெருவில்தான் நிற்கிறது”


“உம்”மென்று சும்மா இருக்காமல்  அரசியலையும் நையப்புடைத்தார்.

“இந்த நாட்டில் நடிப்பவர்கள்தான் தலைவர்களாகிறார்கள் – அல்லது
தலைவர்களாக இருப்பவர்கள் நடிக்கிறார்கள்”


சிவலிங்கம் மாஸ்டராய் மாறி குழந்தைகளுக்கு அளித்த சிந்தனையை யாரால் மறக்க இயலும்…?

“புத்தகங்களே..! 
குழந்தைளை 
கிழித்து விடாதீர்கள்…!”

ஆகா..!  

“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! 
இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் 
குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” 

என்று கேள்வி கேட்டு  திணறடித்தார்.


தலையணை சைஸ் சிலப்பதிகாரக் கதையை  தம்மாந்துண்டு  வரிகளில் சரியாக புரியவைத்தார்
“பால் நகையாள்
வெண்முத்துப் பல்நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய்நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை!” 



இயக்கங்களால் பிரிந்து கிடக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் “செக்” வைத்தார்

“உன் பகைவர்கள் உன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் -நீயோ…
அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டுவதா நீட்டுவதா என்று சர்ச்சையிட்டுச் 
சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாய்” 

அது மட்டுமா? 

“சமூகத்தில் தொழுவதே கொஞ்சம் பேர்கள் தாம் 
அவர்களையும் நீ குழப்பிக் கொண்டிருக்கிறாய்” 

என்று சமுதாயக் குழப்பிகளுக்கு சவுக்கடி தந்தார்.


அறிஞர் அண்ணாவை புகழ்கிறார்

"அண்ணா!
அழுகின்றபோதும்
மேகம் போல் அழுதவன் நீ!
விழுகின்றபோதும்
விதையைப்போல் விழுந்தவன் நீ!
அண்ணா! உன் பெயரிலேயே நீ உறவு கொண்டு வந்தாய்!
பெரியாரோ, காட்டுத் தீ
நீயோ அந்தத் தீயிலே ஏற்றிய
ஒரு திருவிளக்கு
வெறும் தலைகளை எண்ணிய தலைவர்களிடையே
இதயங்களை எண்ணியவன் நீ
உன் எழுதுகோல்
தலை குனியும்போதெல்லாம்
தமிழ் தலை நிமிர்ந்தது.
தொண்டை புரிவதற்கே
தோன்றியவன் என்பதற்கோ
தொண்டை நாடு உன்னுடைய தொட்டில் நாடு ஆக்கி வந்தாய்?"


அண்ணாவின் மரணத்திலும் கவிதைகளால் பூச்சொறிந்தார்.

"அன்று இறந்ததோ நாம்;
புதைத்ததோ உன்னை!
நம்மைப்போல்
பைத்தியக்காரர்கள் யார்?
உடல்களைப் புதைக்கும்
உலகத்தில்
அன்று நாம் ஓர்
உயிரைப் புதைத்தோம்!
கடற்கரையில் பேசுவாய்
கடலலையில் மீனாவோம்
கடற்கறையில் தூங்கிவிட்டாய்
கடற்கரையில் மீனானோம்.
இங்கே புதைக்கப்பட்டது
பெறும் மனித உடலல்ல;
எங்கள்
வரலாற்றுப் பேழை.
நீ மண்ணுக்குள் சென்றாலும்
வேராகத்தான் சென்றாய்.
அதனால்தான்
எங்கள் கிளைகளில்
இன்னும் பூக்கள்
மலர்கின்றன."


தேர்தல் முறைகளைப்பற்றி கேள்வி எழுப்புகிறார் இவ்வாறு

"புறத்திணை சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்.
கையில் மாலையுடன்
குருட்டு தமயந்தி"



இன்றைய அரசியல்வாதிகளுக்கு இப்படி ஒரு சாட்டை

"மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது"



"மீன்கள் விற்கும் சந்தையில் 
விண்மீன்கள் விற்றவனே!"

என்று கண்ணதாசனை புகழ்ந்ததோடு அவர்  தவறையும் உணர்த்தினார்.



காதலை மட்டும் விட்டாரா என்ன?

"நீ விளையாடி
உடைப்பதற்காகவே
இதயங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றன"
**
"காதல் கவிதைகளைக்
கப்பல் செய்து
கண்ணீரில் விட்டுவிட்டேன்"
**
"என்னுயிரோ
உன்னிடத்தில்
உன்னுயிரோ
என்னிடத்தில்
மரணம் என்ன செய்யும்?"
**
"உன் கடிதம் வந்தது
திறக்காமலே
படித்து விட்டேன்"
**
"காதல் துயரமே!
வாழ்க
உன்னால்
மற்ற துயரங்களெல்லாம்
மறைந்துபோய்விட்டன
என்னைப் பிடிக்க
விதி
தன் தூண்டிலில் மாட்டிய
இரை நீ!"
**
"நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்"
**
"என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?"

என்று மரணத்தையே கேள்வி கேட்ட கவிஞரைத்தான் மரணம் தழுவிக்கொண்டுள்ளது. 

"பால்வீதியில் பயணத்தை துவங்கியவனின் 
ஆத்மா நிரந்தரமாய் 
பால்வீதியில் ஆலாபனை செய்ய புறப்பட்டது!"


நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

"அப்துல் ரஹ்மான் 
உயிராய்த்தான் மாண்டார், 
உரமாகி கவிதை மூலம் 
தமிழாய் வாழ்வார். 
என் மூலம், 
எனக்கும் இறங்கல் கூறப்போகும் 
கவி மூலம் 
வாழ்ந்தேதீருவர்" 

என்று கூறியுள்ளார்.


கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு நான் எழுதியுள்ள இப் புதுக்கவிதை சமர்ப்பனம்:

"வெண் தாமரை சூழ் ஏரியைப்போல்
செங்கவிதைகளால் நிறைந்திருந்த 
என் சின்னஞ்சிறு மூளைக்குள்
பெஸ்களும் ஜாவாவும்
பெண்டாட்டியை துரத்திய வைப்பாட்டியாய் 
இன்னும் சிலவும்
'செல்' எங்கும் சொப்ட்கொப்பிகளாய் பதிந்து நிற்க
வானவில் கனவுகள் துயிலெழுகையில் தொலைவதுபோல்
மென் கவிதை நரம்புகள் அறுந்துதான் போயின
இருந்துமென்ன
கருவறையில் கவிதை கற்றவனின் கண்களை
மாயக்கன்னியின் மோகச் சித்துக்களாய்
மடிக்கணணியின் போஜிச்(4G) சிக்னல்கள் கட்டிவிடுமா என்ன?
இதோ 
கவிக்கோவின் பசை கொண்டு அறுந்துபோன 
கவிதை நரம்புகளை ஒட்டிக்கொண்டேன் நான்!"
-கலியுகத் தமிழன்

No comments

Powered by Blogger.