John Dalton (The Father of Atomic Theory) - ஜொன் டொல்டன் (அணுக்கொள்கையின் தந்தை) பிறந்த தின சிறப்புப் பதிவு
"நான் என்னைச் சுற்றியிருக்கும் பலரை ஜெயித்து விட்டேன் எனச் சொல்வேனெனில் ; அது என்னுடைய உலகளாவிய உழைப்பின் மூலம் மாத்திரமே சாத்தியமாகும்!"
வணக்கம் நண்பர்களே...
மேற்கூறிய வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் ஜொன் டொல்டன். இவர் ஒரு ஆங்கில வேதியியலாளர் ; வானியலாளர் மற்றும் இயற்பியலாளருமாவார்!
அவர் நவீன அணு கோட்பாடு வளர்ச்சிக்கு முன்னோடியாகவும் ; நிறக்குருடு சம்பந்தமான ஆராய்ச்சிக்காகவும் அறியப்படுகிறார்!இதனால் அவரது காலம் முதல் இரசாயனவியலில் பெரும் முன்னேற்றம் விளைய வழி ஏற்பட்டது.
"எல்லாப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் எண்ணற்ற நுண்ணிய அழியாத் துகள்களாலானவை" என்று முதன் முதலில் கூறியவர் அவரல்லர். பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞரான டெமாக்கிரிட்டஸ் (கி.மு. 460 - 370) அக்கருத்தை எடுத்துரைத்தார். ஒருவேளை அதற்கு முன்னே அக்கருத்து நிலவியிருத்தல் கூடும்; அக்கருதுகோளை (மற்றொரு கிரேக்க தத்துவ அறிஞரான) எப்பிக்கியூரஸ் ஏற்றுக் கொண்டார். ரோமானிய எழுத்தாளரான லுக்ரேஷியஸ் (இறப்பு கி.மு. 55) தமது தெரேரும் நாத்துரா (பொருள்களின் இயல்பு) எனும் புகழ்மிகு கவிதையில் அக்கருத்தை எழில்பட எடுத்துரைத்தார்!
இடைக்காலத்தில் (அரிஸ்டாட்டில் ஏற்றுக் கொள்ளாத) டெமாக்கிரிட்டஸ் கொள்கை புறக்கணிக்கப்பட்டது. எனினும் அது தற்கால அறிவியலைப் பாதிக்கவில்லை. ஆயினும் (ஐசக் நியூட்டன் உள்பட) 17 ஆம் நூற்றாண்டின் பல முக்கிய அறிவியலாளர் அதுபோன்ற கருத்துகளை ஆதரித்தனர். ஆனால் முற்கால அணுக் கொள்கைகள் எதுவும் அளவினமாக எடுத்துரைக்கப் பெறவில்லை ; மேலும் அணுக்கள் பற்றிய தத்துவ ஊகங்களுக்கும் இயற்பியலின் உண்மைகளுக்குமுள்ள தொடர்பை யாரும் கண்டறியவில்லை!
அப்போதுதான் டொல்டன் தோன்றினார். அவர் தெளிவான ஓர் அளவினக் கொள்கையை வகுத்தார். இயற்பியல் பரிசோதனைகளை விளக்குவதற்கு அதைப் பயன்படுத்த முடியும் ; அதை ஆய்வகத்தில் பரிசோதிக்கவும் முடியும் எனக் காட்டினார்!
ஜொன் டொல்டன் Cumberland, England அருகே Eaglesfield ல், 6 செப்டம்பர் 1766 ம் ஆண்டில், ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். 11 வயதாகும் போது அவர் தம் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. அவர் தாமே அறிவியலைப் பயின்றார். அவர் வயதுக்கு மீறிய அறிவாற்றலைப் பெற்றிருந்தார். தம் 12 ஆம் வயதில் ஆசிரியரானார். பிறகு அவர் தம் வாழ்க்கை முழுவதும் ஆசிரியராக அல்லது தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிப்பவராகப் பணியாற்ற வேண்டியிருந்தது. 15 ஆம் வயதில் கென்டல் நகருக்குச் சென்றார். 26 ஆம் வயதில் மான்செஸ்டருக்குச் சென்றார். இறக்கும்வரை அங்கேயே வாழ்ந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை!
டொல்ட்டனுக்குச் சில நிறங்களைக் காணமுடியாத பார்வைக் கோளாறு இருந்தது. ஆகவே அவர் அதைப் பற்றி அறிய ஆவல் கொண்டார். அதை ஆழ்ந்து ஆராய்ந்து, அக்கோளாறு பற்றி ஓர் அறிவியல் கட்டுரை வெளியிட்டார். அதுவே நிறக்குருடு பற்றிய தெளிவான முதல் வெளியீடாகும்!
1787 இல் வானிலை ஆய்வியலில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு 21 வயது. 6 ஆண்டுகள் கழித்து அதைப் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். காற்றையும் ; காற்று மண்டலத்தையும் பற்றி அவர் ஆராய்ந்ததால், அவருக்குப் பொதுவாக வாயுக்களின் இயல்புகள் பற்றிய ஈடுபாடு ஏற்பட்டது. பல பரிசோதனைகளின் பயனாக அவர் வாயுக்கள் பற்றிய இரு முக்கிய விதிகளைக் கண்டுபிடித்தார். அவற்றுள் முதல் விதியை 1801 இல் எடுத்துரைத்தார். அதன்படி "ஒரு வாயுவின் கன அளவு அதன் வெப்பநிலைக்கேற்ற விகிதத்திலிருக்கும்." இது பொதுவாக சார்லஸ் விதி எனப்படும். ஏனெனில் சார்லஸ் எனும் பிரெஞ்சு அறிவியலாளர் டொல்டனுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இவ்விதியைக் கண்டுபிடித்தார். ஆயினும் அவர் தாம் கண்டுபிடித்ததை வெளியிடவில்லை. இரண்டாம் விதியை டால்ட்டன் 1801 இல் எடுத்துரைத்தார். அது டார்வினின் குறை அழுத்த விதி எனப்படும்.
"வெவ்வேறு வகையான அணுக்களின் எடை வேறுபட்டுள்ள போதிலும் ; ஒரே வகையைச் சேர்ந்த இரு அணுக்கள் பொருண்மை உட்பட எல்லா இயல்புகளிலும் ஒன்றுபோலானவை" என்று டொல்டன் வலியுறுத்தினார். டொல்டன் தமது நூலில் பல்வேறு வகை அணுக்களின் எடைகளைப் பட்டியலிட்டுக் காட்டினார். இதுவே முதலில் தயாரிக்கப்பட்ட அத்தகைய பட்டியலாகும். இது அளவின அணுக் கொள்கையின் முக்கிய இயல்பு!
"ஒரே இரசாயனக் கூட்டுப் பொருளின் இரு மூலக்கூறுகள் அதே அணுக்கலவையினாலானவை" என்று டொல்டன் தெளிவாகக் கூறினார். எடுத்துக்காட்டாக, நைட்ரஸ் ஓக்சைடின் ஒவ்வொரு மூலக்கூறும் இரு நைட்ரஜன் அணுக்களாலும் ; ஓர் ஒக்சிஜன் அணுவாலும் ஆனது என்றார்!
இதிலிருந்து, ஓர் இரசாயனக் கூட்டுப் பொருள் எவ்வாறு தயாரிக்கப்பட்ட போதிலும் ; எங்கு கிடைத்த போதிலும் ஒரே எடை விகிதத்திலுள்ள அதே தனிமங்களாலானது என்பது புலனாகின்றது. இதுவே ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் ஜோசப் லூயிஸ் ப்ரூஸ்ட் பரிசோதனை மூலம் கண்டுபிடித்திருந்த வரையறுக்கப்பட்ட விகிதங்களின் விதியாகும்.
இயற்பியலாளர் அவருடைய நூலில் கூறிய கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றினர்.
- அணுக்களின் எடைகளைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
- இரசாயனக் கூட்டுப் பொருள்களை எடைக்கேற்ப பகுத்துக் கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு வகை மூலக் கூறும் அமைந்த அணுக்களின் கலவையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இம்முறை பெரும் வெற்றியைத் தந்தது!
அணுக் கருதுகோளின் முக்கியத்துவத்தை இங்கு எடுத்துரைக்கத் தேவையில்லை எனலாம். பிற்காலத்திய விஞ்ஞானிகளால் அவரது அணுக்கொள்கை தவறென நிரூபிக்கப்பட்டு விட்டது. எனினும் அதுவே அணுவியலைப் பற்றிய அறிவின் மையக் கருத்து. மேலும் அது தற்கால இயற்பியலுக்கு ஓர் இன்றியமையாத முன்னுரையாக இருக்கின்றது!
1804 இல் டொல்டன் தமது அணுக்கொள்கையை வகுத்து அணு எடைகளின் பட்டியலைத் தயாரித்திருந்தார். ஆயினும் எ நியூ சிஸ்டம் ஆஃப் கெமிக்கல் ஃபிலாசஃபி எனும் அவருடைய முக்கிய நூல் 1808 வரை வெளிவரவில்லை. அந்நூலே அவருக்குப் புகழைத் தந்தது. பிற்காலத்தில் அவர் பல சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றார்!
1805 ல் டொல்டன் நவீன அணுக்கொள்கை பற்றிய தனது முதல் அறிக்கையை வெளியிட்டார். இதில் வாயுக்கள் மற்றும் ஏனைய பதார்த்தங்களின் சிறப்புத் துணிக்கைகளின் சார் நிறைகளின் அட்டவணை உள்ளடக்கப்பட்டிருந்தது!
அணுக்கள் பற்றிய கருத்துரு அவற்றின் நிறைகள் பற்றிய கேள்விகளை உருவாக்கியது. அணுக்கள் பற்றிய கொள்கைகளில் பலர் நம்பிக்கை கொண்டிராவிட்டாலும், பீசமானத் தொடர்புகளை விளக்குவதற்கு அணு நிறைகள் மிகவும் உதவிகரமானது என்பதை இரசாயனவியலாளர்கள் உணர்ந்துகொண்டனர்!
டொல்டன் 1837 ல் ஒரு சிறிய மாரடைப்புக்கு உள்ளானார். 1838 ல் இரண்டாவது மாரடைப்பு வந்தது. இதனால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது.
1844 ல் அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார். அதே வருடத்தில் ஜூலை 26 அன்று அவர் நடுங்கும் கையால் அவரது கடைசி வளிமண்டலவியல் அவதானிப்பை பதிவு செய்தார். 27 ஜூலை, மான்செஸ்டரில், டொல்டன் தனது படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். அவரது உதவியாளர் மூலம் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது!
Manchester Town Hall ல் அவருக்கு இறுதி மரியாதை இடம்பெற்றது. சுமார் 40,000 பேர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இவ்வாறாக ஒரு மாபெரும் விஞ்ஞானியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது!
நன்றி
வணக்கம்
Post a Comment