Search This Blog

'மிருதன்' திரை விமர்சனம் - 'MIRUTHAN' MOVIE REVIEW

முதலிலேயே ‘ஸோம்பி’ குறித்து பார்த்துவிடுவோம். 
அப்போதுதான் ‘மிருதன்'  படம் ஓரளவு புரியும்!


ஸோம்பி? (Zombie) சூப்பர் பவர் கொண்டவர்கள். ரத்த வெறி பிடித்து அலைபவர்கள். குருதியை குடிக்கும் ரத்தக் காட்டேரிகள். கொடூரமானவர்கள். 
உலகையே அழிப்பவர்கள்... இத்யாதி, இத்யாதி என்றுதானே நினைக்கிறோம்? நம்புகிறோம்? 

இல்லை. ஹொலிவுட் செய்த பல பாவங்களில் இதுவும் ஒன்று. 
உண்மையான ‘ஸோம்பி’க்கும், ஹொலிவுட் படங்களில் தோன்றும் ‘ஸோம்பி’களுக்கும் துளிக்கூட தொடர்பில்லை!

ஸோம்பிகள் சினிமாவில் மட்டுமே நடமாடும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று நினைக்காதீர்கள். 
உண்மையில் வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட  'ஹைதி' நாடுதான் அதிக அளவில் ஸோம்பிகள் உள்ள பகுதி என்றும் சொல்கிறார்கள். 
இன்றும் கூட அங்கு நூற்றுக்கணக்கான ஸோம்பிகளைப் பார்க்கலாம் என்றும் சொல்கிறார்கள்.


ஹிட்லர் கூட ஒரு கட்டத்தில் ஸோம்பிகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய படையை உருவாக்க முயற்சித்தாராம். 
கிட்டத்தட்ட எந்திரன் சிட்டி போல. 

ஹிட்லர், ‘The Brotherhood of Death’ என்ற பெயரில் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் அடங்கிய ரகசியக் குழு ஒன்றை அமைத்திருந்தார். 
1935-ம் ஆண்டு அதில் சுமார் நாற்பது கைதேர்ந்த மந்திரவாதிகள் இருந்தனர். 
நூற்றுக்கணக்கனோர் அதில் பயிற்சி நிலையிலும் இருந்தனர். 
அந்த மந்திரவாதிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான 
நாஸி ஸோம்பிக்களை உருவாக்குவதே ஹிட்லரின் எண்ணம். 
எதையும் சாதிக்கும் வல்லமை வாய்ந்த, 
தோற்கடிக்கவே முடியாத, தேவைப்பட்டால் தற்கொலைப் படையாக மாறி பெரும் சேதாரத்தை விளைவிக்கும் 
ஆற்றல் கொண்ட நாஸி ஸோம்பி வீரர்கள் அடங்கிய ‘Super Army’ அமைப்பதே ஹிட்லரின் கனவு.

அப்படி ஒரு படையை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. 
ஆனால் முழுமையாகவில்லை. 
ஹிட்லர் அதுபோன்ற ‘Super Army’யை உருவாக்கியிருந்தால் 
இரண்டாம் உலகப் போரின் வரலாறும் உலகின் தலையெழுத்தும் மாறியிருக்கும் என்கிறார்கள் சில வரலாற்றாளர்கள். 
இதற்கான முறையான ஆதாரங்கள் இல்லை அல்லது வெளிவரவில்லை.




ஒரு மனிதனை இறந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், உயிரை எடுக்கக் கூடாது. 
அதே நேரம் உணர்வையும் கொடுக்கக் கூடாது. 
கிட்டத்தட்ட நடைப்பிணம் மாதிரி அந்த மனிதனை மாற்ற வேண்டும். 
இப்படி மாற்றப்பட்ட மனிதர்களே உண்மையான ‘ஸோம்பிஸ்’.

இப்படிக் கூட அடிமைகளை உருவாக்க முடியுமா? முடியும்! 
அதைத்தான் ஆப்பிரிக்க மந்திரக் கலையான ‘வூடு’ சென்ற நூற்றாண்டு வரை செய்து வந்தது. 
இந்த மந்திரக் கலையை கற்றவர்கள், ‘ஸோம்பி’களை உற்பத்தி செய்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். 
இன்றைய அமெரிக்கா உருவாக, நடைப்பிணமாக மாற்றப்பட்ட இந்த மனிதர்களே காரணம். 




இவர்கள் பண்ணையில் அடிமைகளாக இருந்தார்கள். 
இவர்களுக்கு கூலி தர வேண்டாம். உணவும் அவசியமில்லை. 
வாரத்துக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டால் போதும். 
மற்றபடி மாடு மாதிரி உழைப்பார்கள். 
ஒருநாளைக்கு 15 மணி நேரங்கள் கூட ‘ஸோம்பி’களால் உழைக்க முடியும்.
தூக்கமோ, ஓய்வோ தேவையில்லை. 
என்ன கட்டளை தங்களுக்கு இடப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் 
செய்வார்கள்... செய்வார்கள்... செய்து கொண்டே இருப்பார்கள்.

வூடு மந்திரவாதிகள் ஒரு மனிதனின் ஆன்மாவை பிடுங்கி ஒரு குடுவையில் அடைத்துவிடுவார்கள். 
அதனால்தான் அந்த மனிதன் உணர்வற்ற நிலையில், நடைப்பிணமாக வாழ்கிறான்... என்று கட்டுக்கதையை அலேக்காக தூக்கி கடாசி விடலாம். 
உண்மையில் ‘ஸோம்பி பவுடரை’ தண்ணீரில் கலந்து குடிக்க வைத்துத்தான் ‘ஸோம்பி’களை உருவாக்குகிறார்கள்.
இந்த ‘ஸோம்பி பவுடர்’ மூன்று வழிகளில் தயாரிக்கப்படுகிறது. 

முதலாவது ‘Pufferஎன்னும் விஷ மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் பவுடர். 
இரண்டாவது ஒருவகை கடல் தவளை அல்லது மரத் தவளையிலிருந்து எடுக்கப்படுவது. 
மூன்றாவது இறந்த மனிதர்களின் எலும்புகளையும் பிற கழிவுகளையும் கலந்து உருவாகும் பவுடர். 
இந்த மூன்று வகையிலும் வேறு சில விஷத் தாவரங்கள், விலங்குகளின் கழிவுகள், 
பல்லி, சிலந்தி, தேள், கண்ணாடித் தூள் போன்றவை கலக்கப்படும். 
என்றாலும் Puffer மீனிலிருந்து தயாராகும் பவுடர்தான் அதிக ஆபத்தானது. 
அந்த மீன் ‘Tetrodotoxin’ என்ற கொடிய விஷத்தைக் கொண்டது. 




இந்த பவுடர் கலந்த நீரை குடித்ததும் ரத்த வாந்தி வரும். 
நாடித் துடிப்பு குறைந்து ‘இறந்த’ நிலைக்கு கொண்டு செல்லும். 
ஆனால், இந்த மனிதர்களால் சுற்றி நிகழ்வதை உணர முடியும். 
வினையோ, எதிர்வினையோ புரிய முடியாது. 
இப்படி மாற்றப்பட்ட மனிதர்கள்தான் ‘ஸோம்பி’. 
இவர்களை வைத்து திருட்டு வேலைகளில் ஈடுபடலாம். 
கொலை, கொள்ளைகளை நிகழ்த்தலாம். 
பெண் ‘ஸோம்பி’ என்றால் பாலியல் ரீதியாக சுரண்டலாம்.



கொஞ்சம் கொஞ்சமாக ‘ஸோம்பி’களது உடல் சுருங்கி சக்கையாக மாறிய பிறகு தூக்கி எறிந்து விடலாம். 
என்ன... அடிக்கடி ‘ஸோம்பி’ பவுடர் கலந்த நீரை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். 
உணவில் தப்பித் தவறிக் கூட உப்பை சேர்க்கக் கூடாது. 
காரணம், ‘ஸோம்பி’ பவுடரின் விஷத்தன்மையை உப்பு முறியடித்துவிடும்.

இந்த உண்மைகளை தகுந்த ஆதாரங்களுடன் உலகுக்கு அறிவித்தவர், 
Wade Davis என்கிற அமெரிக்க ஆராய்ச்சியாளர். 
1985ல் வெளியான இவரது ‘The Serpent and the Rainbow’ புத்தகமும், 
அதன் பிறகு வெளியான கட்டுரைகளுமே ‘ஸோம்பிஸ்’ குறித்த தெளிவை உருவாக்கின.


WADE DAVIS

ஆனால், Wade Davis பொய் சொல்கிறார். 
அவர் எந்த ‘ஸோம்பி’களையும் சந்திக்கவில்லை. பார்த்து ஆராய்ந்ததெல்லாம் மனநோயாளிகளைத்தான். 
‘நிஜ’மான ‘ஸோம்பி’, ரத்த வெறி பிடித்த மிருகம்தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 
இவர்கள் அனைவருமே ‘வூடு’ மந்திரவாதிகள் மனிதனின் ஆன்மாவை பிடுங்கி குடுவையில் அடைக்கக் கூடிய அளவுக்கு சக்திப் படைத்தவர்கள் என்பதை நம்புபவர்கள்!

எது எப்படியோ, ‘ஸோம்பி’ பவுடரை ஹொலிவுட் நம்பவில்லை. 
ரத்தக் காட்டேரிகளாகத்தான் ‘ஸோம்பிஸை’ வரையறுக்கிறது. 
அதனால்தான் 1932ல் ஹொலிவுட்டில் வெளியான 
முதல் ஸோம்பி படமான ‘வைட் ஸோம்பி’  முதல் 
இன்று ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட 'மிருதன்' வரை அனைத்து 
‘ஸோம்பி’ படங்களும் அவர்களை கொடூரமானவர்களாகவே சித்தரிக்கிறது.




தமிழில் ஸோம்பியை 'பிணன்' மற்றும் 'மிருதன்' என்று கூறுகிறார்கள். 
மிருதன் என்பது மிருகம்+மனிதன் கலவை சொல் ஆகும். 




ஜெயம் ரவி, லக்ஷ்மி மேனன் நடிக்க “நாய்கள் ஜாக்கிரதை” படத்தை இயக்கிய சக்தி சவுந்திரராஜன் இந்தப் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். 
‘ஸோம்பி’களால் தமிழ்நாடு அழிவதை எப்படி ஹீரோ தடுத்து நிறுத்துகிறார் என்பதுதான் ஒன்லைன். 
இதைத்தான் பல ஊர்களுக்கு பயணம் செய்து, ஹைடெக் மசாலாவாக உருவாக்கியிருக்கிறார்கள். 
ஆக்ஷன் ப்ளாக் பட்டையை கிளப்பும் என்பது எனது நம்பிக்கை.

ஆரம்பம் தொட்டே முழுசாக இப்படத்தில் ரசிகர்களைக் கவர்பவர் ஜெயம் ரவி என்றால் மிகையல்ல, 
கொஞ்சம் கொஞ்சமாக  ஒரு சின்ன ஐமேன் சீயான் விக்ரமாகவே மாறிக்கொண்டிருக்கிறார்.
ஜெயம் ரவி இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கக் கூட முடியாது. 
அப்படி ஒரு அற்புதமான பங்களிப்பு. 
போக்குவரத்துக் காவலராக, பாசமுள்ள அண்ணனாக, கண்ணியம் மிக்க காதலனாக, நல் நண்பனாக ரசிகனின் பார்வையில் மனம் ஊடுருவும் மனிதனாக, 
இறுதியில் மிருதனாக, மிருதனான பின்னும் காதல் மணம் மாறாத காதலனாக ஜெயம் ரவி ஜெயித்திருக்கிறார்.




லட்சுமி மேனன் இளம் பெண் மருத்துவராக, தன்னை, காதலிப்பவருக்கும், கணவராக போகிறவருக்கும் இடையில் கிடந்து தவிக்கிற தவிப்பு கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது.  ‘நச்’ சென்று நடித்துள்ளார்.




காளி வெங்கட், ஜெயம் ரவியின் சக போலீஸ் நண்பராக அவ்வப்போது சற்றே சிரிக்க வைக்கிறார். 

நாயகி லட்சுமி மேனனின் அலட்டல் எம்.பி அப்பாவாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் ஹாஸ்யம், கச்சிதம்! 

ஸ்ரீமன், ஜீவா ரவி, ராகவன், பேபி அனிக்கா, சுரேந்திரன், கிரேன் மனோகர் அமித் பார்கவ், திலிப்ராயன், நெல்லை சிவா, கண்ணன், ரஞ்சன் உள்ளிட்டோரும் உயிரைக் கொடுத்து நடித்துள்ளனர்.

இமானின் இசையில் முன்னாள் காதலி பாடல் ஒகே. 
மிருதன் பாடல் மனசுக்குள் பக்காவாக பிண்ணுகிறது. 
பின்னணி இசை சில காட்சிகளில் ஒப்பேற்றலாகவும் பல காட்சிகளில் ஒ.கே என பாராட்டும் படியும் இருக்கிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ், சி.ஜி, இத்யாதி, இத்யாதிகளும் சேர்ந்து காட்சிகளின் திகிலுக்கும் பரபரப்பிற்கும் உதவி பலம் சேர்க்கின்றன. 

கே.ஜெ.வெங்கட் ரமணனின் படத்தொகுப்பு சிறப்பு, 
கணேஷ் குமாரின் பிரமாண்டசண்டைப்பயிற்சியும் பாராட்டுக்குரியதே.

மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அந்த அம்மா, பிள்ளை, மருமகளுக்கு வெறி பிடிக்கும் காட்சி, விவரிக்கப்பட்ட விதம் புதுமை. 

முன்னாள் காதலி பாடல் படமாக்கப்பட்ட விதமும், அதில்
கொட்டப்பட்டு இருக்கும் உணர்வுகளும் கூட இயக்குனருக்கு 
ஹேட்ஸ் ஒப் டு யு… சொல்ல தூண்டும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலான காட்சிகளில் கோர முகத்துடன் இவ்வளவு ஜூனியர்ஆர்ட்டிஸ்டுக்கள் தேவை தானா? என இயக்குனர் யோசித்திருக்கலாம்! 

அதே நேரம், இவர்களையெல்லாம் கட்டிக்காத்து பலக்காட்சிகளை எடுத்த உழைப்புக்கு இந்த யூனிட்டையும், இயக்குனரையும் பாராட்டலாம்.

இந்த திரைப்படத்தின் இறுதியில், கதாநாயகன் ஜெயம் ரவி ஸோம்பிகளால் தாக்கப்பட்டு அவரும் ஸோம்பியாக மாறி விடுகிறார். 
ஊட்டியில் ஸோம்பியாக மாறியவர், ஒரு பஸ்சின் மீது அமர்கிறார். 
அந்த பஸ் சென்னைக்கு புறப்பட மிருதன் தொடரும்... என்று படம் முடிகின்றது. 
இதனால், "மிருதன் 2" -ன் கதை சென்னையில்தான் என்பது உறுதி. 

ஆனால், ஸோம்பியாக மாறிய ரவியை காப்பாற்ற வரப்போகும் மற்றொரு கதாநாயகன் யார் என்பதை தான் உறுதி செய்ய வேண்டும். 
அது அனேகமாக  சீயான், அஜித், விஜய் இவர்களில் ஒருவராக இருந்தால் சிறப்பு!

இந்த மாதிரி ஸோம்பி வகைப்படங்களின் மிகப் பெரிய பலமே ஒரு கட்டம் வரை திகில் கூட்டும் அமைதியும், எப்போது எங்கே எப்படி ஸோம்பிக்கள் வந்து தாக்கும்? 
அவற்றால் மனிதர்கள் கடிக்கப்படுவது நடக்கும்..? 
என்ற திகிலும், சஸ்பென்சும்தான்.

ஆனால், மிருதனில் சோம்பிக்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்து, துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிக் கொண்டே இருப்பது போரடிக்கிறது. 

இரண்டாம் பகுதியில் நாயகனின் தங்கை உயிர் காக்க உதவும் இரத்தத்துடன் இருக்கிறார்…. எனும் தகவல் வெளித்தெரியும் இடம் திணிக்கப்பட்டதுபோல் இருக்கிறது. 

அவ்வளவு பெரிய சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கும் போது, 
முதல்வர் எங்கு போனார். அதிகாரிகள் எங்கு போனார்கள்? 
“எவனாவது கேள்வி கேட்டு தொலைவான்யா...” 
என்ற பிரக்ஞை சிறிதும் டைரக்டருக்கு இல்லை! 

எது எப்படி இருந்தாலும் இன்றைய சூழலில், எதாவது வித்தியாசமாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் 
இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து இருப்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். 
இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை அளிப்பதோடு, 
தமிழின் முதல் ஸோம்பி வகை திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 
இந்தியாவின் முதல் ஸோம்பி படம் சைப் அலி கானின் 'Go Goa Gone'




நிச்சயமாக மிருதன் ரசிகர்களை ஏமாற்றமாட்டான்!

பின் குறிப்பு := ‘ஸோம்பிஸ்’ என்பவர்கள் படம் குறிப்பிடுவது போல் ரத்த வெறி பிடித்த மிருகங்கள் அல்ல. 
இதை மட்டும் என்றுமே நாம் மறக்கக் கூடாது. 
இந்தத் தெளிவுதான் இன்றைய நவீன உலகை தங்கள் உழைப்பால் உருவாக்கி கொடுத்திருக்கும் 
உண்மையான ‘ஸோம்பி’களுக்கு - ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கு 
நாம் செலுத்தும் மரியாதை!


No comments

Powered by Blogger.