'ஆறாது சினம்' திரை விமர்சனம் - 'AARAADU SINAM' MOVIEW REVIEW
படத்திற்கும் பைபிளுக்கும் சம்பந்தமுண்டு. எனவே படத்தைப் பற்றி பார்க்கமுன் 'பைபிள்' பற்றி பார்த்துவிடுவோம்.
பைபிள் இறைவேதமா? என்ற பேஸ்புக் பேன் பேஜ் ஒன்றிருக்கின்றது.
குரானை ஆதரிப்பதற்காக பைபிளைக் கழுவிக் கழுவி ஊற்றுவது இந்தப் பேஜின் தலையாய பணிகளுள் ஒன்று.
இந்தப்பேஜின் கொடுமையான விடயம் என்னவெனில் பைபிளில் இருக்கும் விஞ்ஞான விளக்கம் என்று ஒரு விளக்கத்தை கிறீஸ்தவர்கள் வெளியிட அது அறிவியல் ரீதியில் முற்றிலும் பொருத்தமற்ற முட்டாள்தனம் என்று வாதிடுகின்றது இந்தப்பேஜ்!
பைபிளைப் பற்றிய இந்தப் பேஜின் கேள்விகளுக்கு மாற்றுக் கருத்தை நீங்கள் முன்வைப்பீர்களாக இருந்தால் நீங்கள் தடை செய்யப்படுவீர்கள்!
(கருத்து சுதந்திரமாம்!)
"பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்"
என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே
"தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது"
என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள்.
இவர்கள் ஒன்றை மறந்து விட்டு பேசுகிறார்கள்.
உலக வரலாறு காலனிய காலகட்டம் என்ற ஒன்றைக் கண்டுள்ளது.
பிரிட்டிஷ், ஒல்லாந்து, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீச ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தார்கள்.
அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்.
அவர்கள் கைப்பற்றிய புதிய பிரதேசங்களில் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள்.
அதற்கு இலகுவாக பைபிளை பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து போதித்தார்கள்.
பைபிள் என்பது ஆங்கில உச்சரிப்பு.
பிபிலியோ (Biblio) என்றால் கிரேக்க மொழியில் புத்தகம் என்று அர்த்தம்.
போர்த்துகீச மொழிப் பெயரான பிபிலியா (Bíblia) என்ற சொல் தான் தமிழில் "விவிலியம்" என்று மாறியது.
ஐரோப்பாவில் கிரேக்க, லத்தீன் மொழிகளைத் தவிர்ந்த பிற மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தன.
ஆகவே அந்நாட்களில் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களுக்கு தெரிந்த முதலாவது நூலும் பைபிள் தான்.
இருந்தாலும் முற்காலத்தில் பைபிளை வாசிப்பதற்கு பொது மக்களுக்கு அனுமதி இருக்கவில்லை.
கத்தோலிக்க மதகுருக்களுக்கு மட்டுமே உள்ள விசேஷ உரிமை அது.
அது மட்டுமல்ல, பைபிளை மொழிபெயர்ப்பது தடைசெய்யப்பட்டு இருந்தது.
ஐரோப்பாவில் லத்தீன் மேட்டுக்குடியினர் பேசும் மொழியாக இருந்தது.
சாதாரண மக்கள் வேறு மொழிகளைப் பேசினார்கள்.
ஆங்கிலம், பிரெஞ்சு எல்லாம் அந்தக் காலத்தில் "பட்டிக்காட்டான் பேசும் தாழ்ந்த பாஷைகளாக" இருந்தன.
சாதாரண குடிமகனும் பைபிளை படித்து புரிந்து கொள்வதை வத்திகான் விரும்பவில்லை.
கத்தோலிக்க தலைவர் பாப்பரசர் "மொழிபெயர்ப்புத் தடை" உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
பைபிள் லத்தீன் மொழியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும்.
அதனை வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது ஆண்டவருக்கு எதிரான பாவகாரியம் என்று அறிவித்தார்.
பாப்பரசரின் உத்தரவை மீறி மொழிபெயர்க்க முனைந்தவர்கள் கிறிஸ்தவ மதத் துரோகிகளாக கருதப்பட்டனர்.
துரோகத்திற்கு தண்டனை மரணம்.
விவிலிய நூலில் எழுதியிருக்கும், கர்த்தரின் நற்செய்தியை வாசித்தவர்கள் அனைவரும்,
உயிரோடு கொளுத்தப்பட்டு பரலோகம் சென்றனர் என்பது வரலாறு!
இன்று லத்தீன் மொழி வழக்கொழிந்து விட்டது.
இதனால் லத்தீன் பைபிளை வாசித்து புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர்.
வத்திக்கானில் கடமையாற்றும் பாப்பரசர், கார்டினல்கள், மற்றும் உலகெங்கும் கிறிஸ்தவ இறையியல் கற்கும் மாணவர்கள் லத்தீன் மொழி படித்துள்ளனர்.
விரல் விட்டு எண்ணக் கூடிய இந்த சிறு கூட்டத்தை தவிர வேறு யாருக்கு லத்தீன் மொழி தெரியும்?
பைபிளை மொழிபெயர்க்கக் கூடாது என்ற தடைச்சட்டம் இன்று வரை தொடர்ந்திருந்தால்,
இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? ஆகவே மொழிபெயர்ப்பு தவிர்க்கவியலாததாக மாறிவிட்டது.
அவ்வாறு மொழிபெயர்க்கும் பொழுது சில இடங்களில் அர்த்தம் மாறுபடுவதும் நடந்துள்ளது.
இன்று ஆங்கிலத்தில் மட்டும் இரண்டு டசின் மொழிபெயர்ப்புகள்
வந்து விட்டன.
கர்த்தரே! இவற்றுள் எது சரியானது?
ஒவ்வொன்றும் எங்கோ ஒரு இடத்தில் வித்தியாசப்படும்.
19 ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அன்க்லிகன் திருச்சபையை சேர்ந்த இறையியல் அறிஞர்கள் (Brooke Foss Westcott & Fenton John Anthony Hort) பைபிளை கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தார்கள்.
அதுவே இன்று சிறந்த மொழிபெயர்ப்பாக(The New Testament In The Original Greek) கருதப்படுகின்றது.
அனேகமாக தமிழ் விவிலிய நூலும் அதை தழுவியே மொழிபெயர்த்திருக்கலாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், உலகில் மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்த அறிஞர்கள் மத நம்பிக்கையற்றவர்கள்!
டார்வினின் பகுத்தறிவுக் கொள்கையிலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு காட்டியவர்கள்.
பரிபூரணமான பைபிள் மொழிபெயர்ப்புக்காக,
கிறிஸ்தவர்கள் இரண்டு நாஸ்திகர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது.வெட்கக்கேடு!
பைபிள் ஆண்டவரால் அருளப்பட்ட நூல் என்பதால், எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும் என்று
பல கிறிஸ்தவர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையின் விளைவாக - பைபிளின் தவறான ஒரு மொழிபெயர்ப்பினை படித்த - ஒரு கல்லூரி பேராசிரியரின் கதைதான்
'ஆறாது சினம்'!
பைபிளும் சரி ஜீஸஸும் சரி எப்போதுமே வன்முறையை ஆதரிக்காதவர்கள் என்பதை மனதில் கொள்க!
நிற்க...
‘ஈரம்’ எனும் பெயரில் ஒரு அழகிய படத்தை தமிழில் வெற்றிகரமாகத் தந்த அறிவழகனின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வந்திருக்கிறது
'ஆறாது சினம்’
ஏற்கனவே பிருத்விராஜ் நடித்து ‘மெமரீஸ்’ எனும் பெயரில் மலையாளத்தில் சக்கை போடு போட்ட படத்தின் தமிழ் ரீ-மேக்தான் இது!
தமிழ்நாட்டு 'சத்ரியன்' படத்தை லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்து மலையாளத்துல எடுத்தா அதையே இவங்க வாங்கி ரீமேக் பண்றாங்க. ஹாலிவுட்டில் அவ்வளவு கதை வறட்சி!
மதுரை பகுதியில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் அருள்நிதி. ஒரு பெரிய ரவுடியை என் கவுண்டர் செய்ய செல்லும்போது, எதிர்பாராத விதமாக ரவுடியின் மனைவி துப்பாக்கி குண்டடிபட்டு இறக்கிறார்.
அப்போது உயர் அதிகாரிகளிடம் இருந்து ரவுடியை என்கவுண்டர் செய்ய வேண்டாம் என்று போன் வந்ததால், என்கவுண்டர் திட்டத்தை கைவிடுகிறார்.
மனைவியை இழந்த ரவுடி, அருள்நிதியை பழிவாங்க அவரது வீட்டுக்குள் நுழைந்து அவர் கண்முன்னே
மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் குழந்தையை கொலை செய்து, தானும் அருள்நிதியின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறார்.
அதுமுதல் மனைவி, குழந்தை இறந்த துக்கத்தில் குடி போதைக்கு அடிமையாகிடும் அருள்நிதி வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்.
நிற்க,
இச்சூழலில் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கிழமையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன.
இந்த வழக்கை போலீஸ் உதவி கமிஷ்னராக இருக்கும்
ரோபோ சங்கரும், அவரின் உதவி போலீஸாக இருக்கும் சார்லியும் விசாரிக்கிறார்கள்.
சினிமா போலீஸ் போல் செயல்படும் ரோபோ சங்கரால் வழக்கு ஒரு அடி கூட நகர மறுக்கிறது.
ஆனால், கொலைகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது,
இதனால் கடுப்பாகும் உயர் அதிகாரி ராதாரவி,
அருள்நிதியின் அபார திறமை மேல் உள்ள நம்பிக்கையில் அவரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார்.
முதலில் அதை ஏற்க மறுக்கும் அருள்நிதி, தன் தாயின் வற்புறுத்தலுக்கு பின், அரை மனதுடன் அவ்வழக்கை விசாரிக்க சம்மதிக்கின்றார்.
அருள்நிதியின் விசாரணைக்குப்பின் பல திடுக்கிடும் உண்மைகள், வெளிவருகிறது.
அதன்பின், நடக்கும் தீவிர விசாரணையும், பரபரப்பு திருப்பங்களும், அருள் நிதி குடியில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதும் தான் ‘ஆறாது சினம்’ படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை.
அருள்நிதி 'அரவிந்த்' என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
தன் காதல் மனைவியையும், ஆசை குழந்தையையும், தன் கண்முன்னே ரவுடி கொல்லும் போது, அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கும் அருள் நிதி,
அந்த சம்பவத்தையும், தன் குடும்பத்தின் கடைசி நேர சப்தத்தையும் அடிக்கடி குடித்தபடி நினைத்து பார்க்கும் காட்சிகளிலும், நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்.
ஹீரோயிசம் இல்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதற்காகவும்,
தொடர்ந்து நல்ல கதையம்சமுள்ள படங்களையே தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி,
இப்படக் கதையையும் தனக்கேற்றபடி, சிறப்பாக தேர்வு செய்து சிறப்பாக நடித்திருப்பதற்காகவும் அருள்நிதியை மனமாரப் பாராட்டலாம்.
படத்திற்கு படம் இவர் 'மேன்லி'யாகிக் கொண்டே வருவது கண்கூடு.
உதயநிதியுடன் ஒப்பிடும்போது இவர் எவ்வளவோ பரவாயில்லை!
அருள்நிதியின் ஆசை மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக ஐஸ்வர்யா ராஜேஷும்,
அருள்நிதிக்கு உதவும் பெண் நிருபராக ஐஸ்வர்யா தத்தாவும்
கொஞ்ச நேரமே வந்தாலும் நீண்ட நாள் மனதில் நிற்கின்ற பாத்திரம் ஏற்று பளிச்சிட்டிருக்கின்றனர்.
போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ராதாரவி மற்றும்
இரக்க சுபாவமுள்ள போலீஸாக வரும் சார்லி ஆகியோர் நடிப்பில் அனுபவம் அசத்துகிறது.
ரோபோ சங்கரின் கொமெடி அடாவடி, அதிகப்படியாகத் தெரிகிறது.
அருளின் அம்மாவாக வரும் துளசி, அமைச்சர் R.N.R மனோகர், ராம்நாத் ஷெட்டி, டொக்டர் சூரி, ஒரு வித சைக்கோ கொலையாளி தூங்கா நகரம் இயக்குனர் கெளரவ் உள்ளிட்டவர்களும் கச்சிதம்.
ஜீத்து ஜோசப்பின் கதை, ராஜேஷ் கண்ணாவின் படத்தொகுப்பு, சக்தி வெங்கட்ராஜ். எம்மின் கலை இயக்கம், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு உள்ளிட்டவை படத்திற்கு மிகவும் பக்கபலமாக
பளிச்சிட்டிருக்கிறது.
தமன் S.S இசையில் பாடல்கள் அனைத்தும் பக்காவாக உள்ளதென்றால் பின்னணி இசை, பாடல்களைக் காட்டிலும் சிறப்பு.
ஆறாது சினம் படத்தின் திரைக்கதையும், காட்சிப்படுத்தல்களும் சற்றே மெதுவாக தொடங்குவது மாதிரி தெரிந்தாலும்
போகப்போக விறுவிறுப்பைக் கூட்டி வித்தியாசத்தை காட்டியிருப்பதில் வென்றிருக்கிறார் இயக்குனர் அறிவழகன்!
ஆறாது சினம் - சூடான சுவை!
Post a Comment