Search This Blog

'தோழா' திரை விமர்சனம் - 'THOZHA' MOVIE REVIEW

தமிழ் சினிமாவில் எப்போதுமே Feel Good படங்களுக்கு வரவேற்புண்டு. 
காரணம் இந்த தகவல் யுகத்தில் மனிதத்தை தொலைத்து  இயந்திரத்தனமாய் வாழும் நமக்கெல்லாம் 
ஒரு 2 1/2 அல்லது 3 மணி நேரம் தொலைத்த மனிதத்தை தேடிதருபவை 
இந்த கெடகரி படங்கள் என்று சொன்னால் மிகையல்ல!
அறுவையான அக்க்ஷன் படங்களுக்கு மத்தியில் அருமையான 
இவ்வகைப் படங்களை பார்ப்பதும் ஒரு சுகம்தான்!
அந்தவகையில் தமிழ் சினிமாவின் Feel Good படங்களான 
பவித்ரா, காதலுக்கு மரியாதை, தெய்வத் திருமகள், க.க.போ, ஒட்டொக்ராப் 
வரிசையில் 
PVC சினிமாஸ் பிரமாண்டத் தயாரிப்பில் வம்சி எனும் 
தெலுங்கு ஹிட் இயக்குனர் இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளிவந்திருக்கும் திரைப் படம் தான் ‘தோழா' - தெலுங்கில் 'Oopiri'



சர்வதேசத் திரைப்படங்களை அதிகார பூர்வமாகவே 
ரீமேக் செய்யும் போக்குக்கு ஹாலிவுட் மாறியிருக்கிறது. 
‘தூங்காவனம்’, ‘க.க.போ’ படங்களைத் தொடர்ந்து ‘தோழா’ படமும் 
'The Intouchables' என்னும் பிரஞ்சுத் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.


வசதி, வறுமை, உடல்நலம், நோய், மகிழ்ச்சி, துயரம் ஆகிய துருவங்களை 
அருகருகே வைத்துக் காட்டுகிறது ‘தோழா’. 
உணர்வுகள், வாழ்நிலைகளில் மட்டுமல்லாமல் 
வாழ்க்கை குறித்த பார்வைகளிலும் இந்த வித்தியாசம் 
படம் முழுவதும் காணப்படுகிறது. 
பணத்தை வைத்து மட்டும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது என்பதையும், 
நம்பிக்கையுடன் வாழ உறவுகளும் நேசமும்தான் அவசியம் என்பதையும் அழகாகப் பதிவுசெய்கிறது ‘தோழா’.

வாழ்க்கை பற்றிய நமது கண்ணோட்டத்தின் மீது சலனத்தை ஏற்படுத்தும் இந்தச் சித்தரிப்பு பாராட்டத்தக்கது.




தெலுங்கு ரசிகர்களை குறிவைத்து திரைக்கதையில் செய்யப்பட்டிருக்கும் சிற்சில சமரசங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்
‘தோழா’வை இருகரம் நீட்டி அணைத்துக்கொள்ளலாம்.

கதை :


இந்தியாவின் டொப்-மொஸ்ட் பணக்காரர் விக்ரம்.
அத்தோடு இவர் ஒரு பொமியுலா-3 கார் ரேஷரும் கூட.
நந்தினி எனும் பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறார்.
இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு paragliden (பராசூட்டில் பறத்தல்).

ஒரு தடவை பரீஸ் நகரில் paragliden செய்யும்போது விக்ரமுக்கு முதுகுத்தண்டில் அடிபட்டு, கழுத்துக்கீழ் செயல்படாமல், வாழ்க்கைச் சக்கரத்தை, சக்கர நாற்காலியிலேயே கடத்தும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்.

இதனால் நந்தினியே தன்னை வெறுப்பதுபோல் பக்காவாக ஒரு ட்ராமாவை தன் வக்கீல் நண்பர் பிரஷாத் மூலம் ஏற்பாடு செய்து தனிமையில் வாழ தொடங்குகிறார்.
இருந்தாலும் இவரால் நந்தினியை மறக்க முடிவதில்லை.
மற்றவர்கள் தன்மீது பரிதாபப்படுவதையும் சகித்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார்.
இப்படியே 5 வருடங்கள் ஓடிமறைகின்றது.
இடைப்பட்ட காலத்தில் ஆர்ட்டிஸ்ட் பிரியாவுடன் கடிதத் தொடர்பு ஏற்படுகிறது.
பிரியா விக்ரமை காதலிக்கிறாள். ஆனால் விக்ரமோ பிரியாவை காதலித்தபோதும் வெளிப்படுத்த தயங்குகிறார்.

இப்படி செல்லும் விக்ரமின் வாழ்க்கையில் தன்னை கவனித்துக்கொள்ள ஒரு caretaker தேவையென உணர்ந்து தன் P.A கீர்த்தி மூலம் ஒரு இண்டர்வியூவுக்கு ஏற்பாடு செய்கிறார்.
அதில் தேர்வாகிறான் சீனு.

சீனு எப்படிப்பட்டவன்?
சீனுவின் தாய் தந்தையர் ஒரு விபத்தில் இறக்க சித்தியால் வளர்க்கப்படுகிறான். 
சித்திக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். 
குடும்பத்தின் வறுமையை போக்க திருடச்செல்லும் சீனு 
பொலிஸிடம் மாட்டி சிறைக்கு செல்கிறான்.
சிறைக்கு சென்ற சீனுவை குடும்பம் வெறுக்கிறது.

சீனுவின் மாமா லிங்கம் சீனுவை பரோலில் எடுக்கிறார்.
வெளியே வரும் சீனு விக்ரமின் அழகான P.A கீர்த்தியால் ஈர்க்கப்பட்டு இண்டர்வியுவுக்கு சென்று செலக்ட் ஆகிறான்.

எல்லாரும் பார்க்கும் பரிதாபப் பார்வை பிடிக்காத விக்ரமுக்கு 
ஜொலியாக  ‘அண்ணா.. அண்ணா’ என்றழைத்துத் 
தன்னை பார்த்துக்கொள்ளும் சீனுவை பிடித்துப்போகிறது. 

பதிலுக்கு தன் குடும்பம் தன்னைப் புரிந்துகொள்வதில்லை என்ற 
வருத்தத்தில் இருக்கும் சீனுவுக்கு
 ‘நான் உன் அண்ணன்தானே?’ 
என்று உதவுகிறார் விக்ரம்.

இருவருக்கும் இடையில் சகோதர பாசத்துடன் கூடிய தோழமை உருவாகிறது. 
இந்த நட்பு  இருவரின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.

ஒருகட்டத்தில் தன்னைத் தொலைத்துவிட்டோம் என்று உணரும் விக்ரமுக்கு அவரது இயல்பை மீட்டெடுக்க பரிஸ் அழைத்துச் செல்கிறான் சீனு. 

திரும்ப இந்தியா வந்ததும்
‘நீ இங்க இயல்பா இல்லை, உன் குடும்பத்துக்கே போ’  என சீனுவை
அவன் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார் விக்ரம். 

பிரிந்தபின் தோழர்கள் என்ன ஆனார்கள்?
நந்தினியின் நிலை என்ன?
விக்ரமும் பிரியாவும் சேர முடிந்ததா?
சீனுவை குடும்பம் ஏற்றுக்கொண்டதா?
சீனுவின் கீர்த்தியுடனான ஒருதலைக் காதல் என்னவாயிற்று?
விக்ரமை கவனித்துக்கொள்ள சீனு திரும்ப வந்தானா?

என்பதையெல்லாம் உணர்வுகளைக் கொட்டி அதே சமயம் ஜொலியாய் சொல்லியிருக்கிறார்கள்  'தோழா' டீம்.

டெக்னீஷியன்ஸ் :


கதையாக சொன்னால் படு சுமாராக இருக்கும் இந்த திரைக்கதையை
தன் யுக்தியால் கவிதை போல வடித்து கனவு போல மிளிர வைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி. 
காற்றில் சிதறும் ஒரு சொட்டு கண்ணீருக்கும் கூட ஒரு காரணம் சொல்கிறார்.

ஒரிஜினலின் காட்சியமைப்புகளை மாற்றியதுதான் 
இந்தப் படத்தின் சிறப்பு. 
ஐரோப்பியச் சமூக வாழ்க்கை முறை அடிப்படையில் எழுதப்பட்டிருந்த திரைக்கதையை
இந்தியச் சமூகத்துக்கான ஒன்றாக மாற்றி அதன் வடிவமும் கெடாமல் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் வம்ஷி.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திர வடிவமைப்பும் அதற்குத் தகுந்த நடிகர்களை தேர்வு செய்திருப்பதும்தான்!
ஒரு கொமெடி காட்சி அதைத் தொடர்ந்து அழவைக்கும்படியான செண்டிமென்ட் காட்சி என அடுத்தடுத்து கொடுத்து ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்கவிடாமல் செய்திருக்கிறார்.

வீடு-அதை விட்டால் ஈசிஆர் ரோடு-அதற்கப்புறம்? 
என்று யோசிக்கும்போது கதையை பிரான்ஸ்சுக்கு கொண்டு போகிறார் வம்சி. 
அவ்வளவு பெரிய அழகான நகரத்தை இலவசமாக சுற்றிக்காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 
அங்கும் படு பயங்கரமான ஒரு கார் சேசிங் வைத்து மிரள விட்டிருக்கிறார். 

இது ஒரு ரீமேக் படம் என்பது எந்த இடத்திலும் தெரியாத அளவிற்கு அற்புதமாக இயக்கியிருக்கும் வம்சிக்கு வாழ்த்துக்கள்!

ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்தின் லாவகங்களில் மின்னல் தெறிக்கிறது.
சீனுவின் வீட்டைக் காட்டும்போது திரைமுழுதும் தெரியும் ஒருவித Tone விக்ரமின் பங்களாவிற்கு மாறும்போது பிரம்மாண்டமாய் மாறும் வித்தையை 
வினோத்தின் கேமரா செய்திருக்கிறது. 

அதேபோல அந்த பரிஸ் ரேஸ் சீட்டில் ஒட்டி உட்காரச் செய்கிறது.
வினோத்தின் ஒளிப்பதிவு பனகல்பார்கோ பரிஸோ இத்தனை 
கலர்புல்லாக கண்களுக்கு செம்ம விருந்து.

கோபி சுந்தரின் பின்னணி இசை அருமை பாடல்கள் பலவீனம். 
இந்தப் படத்திற்கு பாடல்களின் தேவை இல்லை. 
படத்தின் இயல்பைக் குறைத்துவிடுகிறது இடையிடையே வரும் பாடல்கள். 
குறிப்பாக அந்த Item பாடலைத் தவிர்த்திருக்கலாம்.
அழகான ஹீரோயின் இருந்தும் சரியான டூயட் இல்லை.
இருந்தாலும் மதன் கார்க்கியின் வரிகளில் அமைந்த 
‘தோழா’ பாடலின் வரிகள் மற்றும் அதைக் காட்சிப்படுத்தியவிதம் 
ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்த படத்தின் ஆகப்பெரிய அற்புதங்களில் ஒன்று வசனம். 
ஆனந்த விகடன் புகழ் ராஜுமுருகனும் 
 அதே நிறுவனத்தின் வார்ப்பான சி.முருகேஷ்பாபுவும் எழுதியிருக்கிறார்கள். 

குறிப்பிட்டு சொல்லக்கூடிய வசனங்கள்

  • "மனுஷன் போற இடத்துக்கெல்லாம் மனசு போகாதுங்கறது நிச்சயம்"

  • “பயம் இருக்கும் இடத்தில் தான் காதல் இருக்கும்"

  • "அண்ணா பஸ்ட் டைம்னா இவ்ளோ பணம் சம்பாதித்தது.. சம்பாதித்ததே இது தான் முதல் தடவை"

  • "சார் என கூப்பிடுவது, பிடிக்கல  ஸ்கூல் பிடிக்காது போனதே… சார் களால தான் அதனால அண்ணான்னு கூப்பிடுவா….?"

  • "ஆண்டவன் பேட் பாய்"

  • "பிரேயர்ல சைலன்ஸ் ஒ.கே  பார்ட்டில என்னய்யா சைலன்ஸ்? "

  • "உன்ன எனக்கு ஏன் பிடிச்சிருக்கு தெரியல. ஆனா உனக்கு பிடிச்சிட்டா நீ என்னைய நல்லா பார்த்துப்பன்னு தெரியுது"

  • "அஞ்சு நிமிஷத்துல எல்லாமே வெறும் ஞாபகம் ஆகிடுச்சு"

  • "சந்தோஷத்தை எங்கு தொலைத்தமோ அங்கு தான் தேட வேண்டும்"

  •  "எல்லாரும் என்னை இரக்கமா பார்க்கறதுதான் பிடிக்கல. அதுனால இவன்தான் என்னைப் பார்த்துக்க சரியான ஆள்" 


இப்படி வெகு இயல்பாகவும், அழுத்தமாகவும் கடந்து போகிற வசனங்களை தொகுத்து எடுத்தாலே ஒரு தத்துவ புத்தகம் ரெடியாகும்.

இங்கே விடுபட்ட டெக்னீஷியன்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

நடிகர்கள் :


நாகர்ஜூன்

தெலுங்கு ஹீரோக்களை தமிழ் படங்களில் நடிக்க வைக்கிற போது பெரும்பாலும் அது கன்றுக்குட்டி மூக்கில் தும்பிக்கையை பிக்ஸ் பண்ணிய மாதிரி பொருந்தாமல் தொங்கிக் கொண்டிருக்கும்.
 ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை ஒவ்வொரு ரசிகனின் மனசுக்குள்ளேயும் வைத்து பூட்டிவிட்டு போகிற வித்தை இந்த படத்தில் நடந்திருக்கிறது.

ஐந்தாண்டுகளாக, கை கால் விழுந்த நிலையில் வீல்சேரில் வாழ்க்கை நடத்தும் பெரும் தொழில் அதிபர் விக்ரமாக நாகார்ஜுனா ஹாசம். 
வயது ஏற ஏற வசீகரம் கூடுகிறது. 

ஒரு மெல்லிய புன்னகையில், ஒரு வெற்று பார்வையில், ஒரு கண்ணசைவில் எல்லாவற்றையும் பேசி விடுகிறார். 
ஒரு மனுஷன் உட்கார்ந்தபடியே படம் முழுக்க வருவது, அப்படியே வந்தாலும் வினாடி நேரம் கூட அலுப்பு தட்டாமல் ரசிகனை ஆட்கொள்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமேயில்லை.
 அவ்வளவு பெரிய ஸ்டார்... 
பிளாஷ்பேக்கில் ஒரு டூயட் கூட பாடியிருக்கலாம். 
ஆனால் ஒரு ஷாட்டில் அவர் நடந்து வருவதாக காட்டுகிறார்கள். 
அவ்வளவுதான். அதற்கே கிளாப்ஸ்!

மொத்த நடிப்பையும் முகத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டிய சவாலான கேரக்டர் .
ஒரு சூப்பர்ஸ்டாருக்குள் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆக்டரை சாதாரணமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் நாகார்ஜுனா. 
படத்தில் இவர் செய்யும் சிறு சிறு முகபாவனைகள் கூட ரசிக்க வைக்கின்றன.

தெரியாத பொண்ணுக்கு மலர் கொத்து அனுப்பி ஆர்வத்த தூண்டி டேட்டிங் அழைத்து போவது எல்லாம் கச்சிதமாக செய்திருக்கிறார் நாகா.

நாகார்ஜீனா கேரக்டரை ஒத்துக்கொள்ளவே ஒரு பெரிய தில் வேண்டும். 
ஆக்ஷன் ஹீரோ என்றாலும் அடக்கி ஒடுக்கி ஒரு வீல் சேரில் தன் பயணத்தை நிறுத்தியுள்ளார்.

கோபம், அன்பு, பாசம், கண்டிப்பு, ரொமான்ஸ் என அனைத்தையும் தன் கண்களிலும்  உதட்டு அசைவிலும் உணரச் செய்துள்ளார். இன்னும் ஸ்மார்ட்டாகவே தெரிகிறார்.

நாகர்ஜுனா இத்தனை வருடத்தில் 2 நேரடி தமிழ் படங்களில்  மட்டுமே நடித்துள்ளார் என்பது நமக்கு தான் இழப்பு போல
 ஒவ்வொரு காட்சியிலும் நெகிழ வைக்கின்றார். 
உட்கார்ந்தே நம் மனதை கவர்ந்துவிட்டார்!
ஆனாலும் எங்களுக்கு உதயம் நாகார்ஜுனாவையும்
ரட்சகன் நாகார்ஜுனாவையும் மறக்க முடியலயே பாஸ்!


கார்த்தி

சீனுவாக கார்த்தி களேபரம்!

துறு துறு பொடி லங்குவேஜ், படபட வசனங்கள், ரொமான்டிக் லுக் என மீண்டும் பையா, நான் மகான் அல்ல படங்களில் பார்த்ததைப்போல அச்சு அசலாக கண்முன் நிற்கிறார் கார்த்தி. 
நாகார்ஜுனாவுக்கும் அவருக்குமான ‘கெமிஸ்ட்ரி’, 
கார்த்தி & தமன்னாவின் கெமிஸ்டரியை 
ஓவர்டேக் செய்திருக்கிறது.

காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை என எல்லாவற்றிலும் புகுந்து கலக்கியிருக்கிறார் கார்த்தி. 
குறிப்பாக, இந்த படத்தில் கொமெடிக்கென்று தனியாக கொமெடியன் இல்லையே என்ற உணர்வை இவர் தகர்த்தெறிந்திருக்கிறார்.

அர்த்தமில்லாமல் ஒரு ஆர்ட் வரைந்துவிட்டு, அதை பிரகாஷ்ராஜ் மூலம் கேட்டு தெரிந்துக் கொள்வது நச். 
தமன்னாவுடன் காதலை சொல்லிவிட்டு, கண்ணாடியில் முட்டி கொள்வது, 
சித்தியிடம் பாசத்துக்காக ஏங்குவது என ஒவ்வொன்றிலும் நவரசத்தை காட்டியிருக்கிறார்.

"சீனு நீ வர வேண்டாம் நீ அதிகமா பேசுவ" என நாகார்ஜூனா சொல்ல,  "அதுக்காக நீங்க பேசாம வந்துடாதீங்க" என்று கார்த்தி சொல்லும் சீன் வாவ்!

பெயிண்டிங் வரைந்து அதை நாகார்ஜூனா மூலம் விற்று உருகும் இடத்தில் இன்னும் கவருகிறார்.

நாகார்ஜூனாவை சார் என கூப்பிடுவது, பிடிக்கல என சொல்லி  "அண்ணான்னு கூப்பிடுவா….?" என பர்மிஷன் கேட்டு 
அதன் படியே கூப்பிடும் இடத்தில் மேலும் கவருகிறார்.

பிரகாஷ் ராஜிடம் பகலிலேயே பொரின் சரக்கு சாப்பிட்டு உளறுவது… 
5 வருஷமா நடக்கும் நாகார்ஜுனாவின் சர்ப்பரைஸ் பார்ட்டியில  பிரகாஷ்ராஜை கலாய்ப்பது.
"ஜெயில்ல இருந்து வந்த அண்ணன் இருக்கான், ரோட்ல சுத்துற தம்பி இருக்கான் அப்படின்னு சொன்னா அவங்க அப்பா ஒத்துக்க மாட்டாரு"  என தங்கை சொல்லும் இடத்தில் கண்களாலேயே உருகுவது
எல்லவற்றையும் காட்டிலும் நாகார்ஜூனாவுடனான தோழமையில் நேர்மையும், உண்மையும் காட்டி உழைத்திருக்கிறார் 
என்பது தான் இப்படத்திற்கு பெரும் பலம்.

அவ்வளவு பெரிய பணக்காரரான நாகார்ஜுனாவை அசால்ட்டாக டீல் பண்ணும் கார்த்தியின் ஸ்டைலுக்கு நாகார்ஜுனாவே அடிக்ட் ஆவதுதான் விசேஷம். 
கார்த்தியின் இன்னொசன்ஸ் தியேட்டரை மட்டுமல்ல, திரைக்குள்ளிருக்கும் நாகார்ஜுனாவையும் சேர்ந்தே சிரிக்க வைக்கிறது. 
குறிப்பாக, "நம்மளே பெயின்ட் பண்ணிட வேண்டியதுதான்" என்று கார்த்தி வெறிகொண்டு கிளம்பும்  காட்சியில் தியேட்டரே தெறிக்கிறது.

முதல் பார்வையிலிருந்தே தமன்னாவை துரத்தக் கிளம்பும் கார்த்தியின் குறும்புகள் ஒரு புறம் ரசிக்க வைக்க, 
தமன்னா ‘விழுகிற’ அந்த செகன்ட்டுக்காக காத்திருக்கிறது மனசு. 
ரொம்ப பொயட்டிக்காகவே அந்த நிமிடங்கள் நகர்கின்றன.
கார்த்தியின் பாத்திரம் அவருக்குப் பழக்கமான வார்ப்புக்குள்தான் இருக் கிறது என்றாலும் ஒவ்வொரு காட்சி யையும் துடிப்போடு செய்திருக்கிறார்.


தமன்னா


தமன்னா நாகர்ஜூனாவின் P.A கீர்த்தி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். 
அதேநேரத்தில் கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கவும் செய்திருக்கிறார்.
தமன்னா படம் முழுவதும் வந்தாலும் நடிப்பதற்கு பெரிய வேலையில்லை. 
ஆனால், அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை அழகாக இருக்கிறார். 
சில இடங்களில் படத்தில் வரும் பரீஸ் வைட் லேடிகளையே பீட் செய்கிறார் அம்மணி!
இன்னும் எத்தனை வருஷத்துக்குதான் இப்படியே குல்பியில் போட்ட ரசகுல்லாவாகவே இருப்பாரோ? 



பிரகாஷ் ராஜ்


வக்கீல் ப்ரஷாத்தாக பிரகாஷ்ராஜ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கார்த்தி யின் பெயிண்டிங்கை அவரிடமே, பெருமையாக விளக்குவது, 
ஒரு இடத்தில் "டேய் போதும்டா ரொம்ப ஓவரா நடிக்காத" என 
கார்த்திய பார்த்து சொல்வது.. ரசனை.

அதிலும் கார்த்தி வரைந்த பெயிண்டிங்கை நாகர்ஜுனா, பிரகாஷ்ராஜிடம் ஏமாற்றி விற்கும் இடம், 
அந்த உண்மை தெரிந்து பிரகாஷ்ராஜ் கொடுக்கும் ரியாக்ஸனில் தியேட்டரே அதிர்கின்றது.


விவேக் 

வக்கீல் லிங்கமாக விவேக்கிற்கு சின்ன வேடம்தான் என்றாலும் கச்சிதமாக செய்திருக்கிறார்.
அதிலும் கார்த்தியின் தங்கையின் காதலன் வீட்டில்
அடாவடியாக பேசும் பையனின் அப்பாவிடம்
"நாய் ஜாக்கிரதை போர்டுக்கு பதில், நாய்கள் ஜாக்கிரதைன்னு போர்டு வைங்க"
 என்னும் இடத்தில் கவனிக்க வைக்கிறார்.






ஜெயசுதா

பழம்பெரும் நடிகை ஜெயசுதா கார்த்தியின் கண்டிப்பான பாசமான  சித்தியாக செண்டிமெண்ட் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.






கல்பனா

மறைந்த நடிகை கல்பனா சமையல்காரியாக வந்து அனுபவ நடிப்பால் கலகலப்பூட்டுகிறார்.
இது அவரது இறுதிப் படம்!






அனுஷ்கா

கொஞ்ச நேரமே நாகார்ஜூனாவுடன் கொஞ்சிப் பேசிப் போகும் அனுஷ்கா நந்தினியாக கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்.
"காதலிச்சதை பெருமையாக நினைக்கும் வாழ்வே சுகம்தான்" 
என்று நாகர்ஜூனாவிடம் சொல்லி விடைபெறுவது அசத்தல்.





ஸ்ரேயா


பிரியாவாக ஸ்ரேயா இருக்கிறார்
ஆனால் அதோ... என்பதற்குள் பறந்துவிடுகிறார்
கெஸ்ட் ரோல்தான். அதிலேயும் ரொம்ப ஜஸ்ட் ரோல்!


மனதைப் பிழிய வைக்கும் ஒரு கதைக்களத்தை கையிலெடுத்து
 ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் படத்தின் முதல்பாதியை கொமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து 
உருவாக்கியிருப்பது நல்ல முடிவு. 

படத்தில் வரும் சென்டிமென்ட் காட்சிகள் அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உருவாக்கப்பட்டிருப்பதால் படத்தோடு நம்மால் எளிதில் பயணிக்க முடிகிறது. 

படம் கலர்ஃபுல்லாக ஜொலிக்கிறது. 
குறிப்பாக பிரான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொள்ளை அழகு!

படம் கொஞ்சம் நீளமோ என்ற உணர்வைத் தருவதும்
ஆங்காங்கே இடையூறாக அமைந்த பாடல்களையும் தவிர்த்து
படத்தில் பெரிய குறையெதுவுமில்லை.

'தோழா' - அனைவரும் பார்க்கவேண்டிய அற்புதப் படைப்'பூ'

***

No comments

Powered by Blogger.