Search This Blog

சீதனம் (Bridal Money) வழங்கலாமா?

வணக்கம் நண்பர்களே...@!!@

சீதனம் ; இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல! புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல! ஆனால் நிரந்தரமானது! எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக்குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை. இவ்வையகத்துக்கு பெண் வரம் வேண்டி வந்த சமுகத்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல ; பெண்ணுக்குப் பெண்ணே (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் கலங்கரை விளக்கம்!

இந்தச் சீதனம் காலத்துக்குக் காலம் உருமாறி பணமாகப், பொருளாக, நகையாக மாற்றமடைந்து தற்போது எதுவுமே வேண்டாமெனக் கூறி (அவசரப்படவேண்டாம்) சிறிதாக ஒரு வீடு அல்லது காணி, நிலம் இப்படி ஏதாவது இருந்தால் போதும் என்ற பவ்வியமான பேச்சு நம் மத்தியில் உள்ளது!

உண்மையில் சீதனம் என்பது என்ன? அது கட்டாயம் கொடுக்கப்படத்தான் வேண்டுமா? என ஆராய்ந்தபோது எனக்கு கிடைத்த விடைகள் ஆச்சரியமானவை! இவற்றைப் பற்றி விபரிக்க முன்னால் சீதனத்தின் தோற்றம் பற்றி நாம் பேசவேண்டும்!




 


தமிழர்களின் பாரம்பரிய தொழில் விவசாயம் என்பது நாம் அறிந்ததே! விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்து ; விவசாயிக்கு உதவும் மிருகங்கள் மாடுகள். இதனால் ஒவ்வொரு விவசாயியும் தான் வளர்க்கும் மாட்டினை தன் உறவினனைப் போல் நேசிப்பான்!

ஒவ்வொரு விவசாய குடும்பத்திலும் ஒரு ஆண் மகன் பிறந்தவுடன், அவனுக்கென தனியாக ஒரு காளைக் கன்று ஒதுக்கப்படும். அந்தக் குழந்தை வளர வளர ; அவனுடனே அந்தக் கன்றும் வளர்ந்து காளையாகும். அவன் அந்தக் காளையுடன் பகலில் வயலுக்கு சென்று, இரவில் வீடு திரும்புவான்.

இதேபோல் பெண்குழந்தை பிறந்தால், ஒரு பசுக் கன்று அவளுக்கென ஒதுக்கப்படும். அவள் திருமண வயதை அடையும்போது, பசுவும் பருவமடைந்திருக்கும். அவள் திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும்போது கணவனிடம் இருக்கும் காளைக்கு துணையாக, தன் பசுவைக் கொண்டு செல்வாள். இதுதான் சீதனம் அறிமுகமான கதை! இங்கு சீதனம் என்பது பணமல்ல... மாறாக, பெண் கொண்டு செல்லும் பசுதான் சீதனம்! 

இதனால்தான் தமிழர்கள் மாட்டிறைச்சியை உண்பதுமில்லை... பசுக்களை கொல்வதுமில்லை! தமிழர்கள் பார்வையில் மாடுகள் என்பது ஒருவகையான செல்வம்! அந்த நாட்களில் எதிரிகளின் மீது படையெடுக்கும் தமிழ் அரசர்கள் அவர்களிடம் இருக்கும் மாடுகளை பிடித்துக்கொண்டு வருவார்கள். இதற்கு "ஆய்கவர்தல்" என்று பெயர்!

சீதன முறை பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது. இதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு  வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும்!

யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் மிகப் பழைய நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான சான்றாக விளங்குவது, யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமான தேசவழமை ஆகும். தேசவழமைச் சட்டம் என்பது ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் தொகுக்கப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட, யாழ்ப்பாண அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பு ஆகும். இது 17 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. 

எனினும், யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் தோற்றம் பற்றியோ, யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்த இதன் வடிவம் பற்றியோ சரியான தகவல்கள் கிடையாது. இது பற்றி ஆராய்ந்த சில அறிஞர்கள் சிலர் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 

தேசவழமை பற்றி ஆராய்ந்த "கந்தவல" என்பவர் பெயர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்துச் சீதனத்தின் தோற்றத்தை இந்துச் சட்டத்தின் சிறீதனம் என்பதோடு தொடர்புபடுத்தி உள்ளார். 

தேசவழமைச் சட்டத்தின் சீதன முறையில் தாய்வழிச் சொத்துரிமைக் கூறுகளை எடுத்துக்காட்டிய H.W.தம்பையா ஒரு காலத்தில் தமிழர்களிடையே நிலவிய தாய்வழி முறை, கேரளாவின் மருமக்கட்தாயச் சட்டம் ஆகியவற்றை யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் தோற்றத்துக்கான அடிப்படைகளாகக் காட்டுகிறார். இன்றைய கேரளாப் பகுதியில் இருந்து குடியேறியவர்கள் மூலம் அறிமுகமான மருமக்கட்தாய முறையின் கூறுகள் யாழ்ப்பாண நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றமடைந்து யாழ்ப்பாணச் சீதன முறை தோற்றம் பெற்றது என்பது அவரது கருத்து.

பிற்காலத்தில் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு தேசவழமையின் சீதனம் குறித்த பல விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன! வேறுசில வழக்கொழிந்து போயின!

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் மூலம் இணைந்து குடும்பமாக வாழ்கின்றபோது, அவர்களுக்கு வந்து சேரும் சொத்துக்களைத் தேசவழமை மூன்று வகையாக இனம் காணுகின்றது. 

ஆண் கொண்டுவரும் சொத்து முதுசொம் என்றும், பெண் கொண்டுவரும் சொத்து சீதனம் என்றும், இருவரும் குடும்பம் நடத்திவரும் போது தேடிக்கொள்ளும் சொத்து தேடியதேட்டம் என்றும் அழைக்கப்படுகின்றன. 

இருவருக்கும் ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்தால், முதுசொம் ஆண்பிள்ளைகளுக்கும், சீதனம் பெண்பிள்ளைகளுக்கும் சேரும். தேடியதேட்டத்தில் இருபாலாருக்கும் பங்கு உண்டு. ஆனாலும், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலேயே,  இது இறுக்கமாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை!

அக்காலத்திலேயே, பெண்பிள்ளைகளின் திருமணத்தின்போது முதுசொம், சீதனம், தேடியதேட்டம் என்ற வேறுபாடின்றி, எல்லாவகைச் சொத்துக்களிலிருந்தும் சீதனம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது!

எனவே தேசவழமையின்படி சீதனம் என்பது தாய்வழியாகப் பெண்பிள்ளைகளுக்குச் சேருகின்ற சொத்துரிமையின் பாற்பட்டது. இது மருமக்கட்தாய முறையின் எச்சமாகக் கருதப்படுகின்றது. திருமணமான ஒரு பெண் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால் அவள் கொண்டுவந்த சீதனம் அவளுடைய சகோதரிகளுக்கோ, அவர்கள் இல்லாதவிடத்து அவர்களது பெண்பிள்ளைகளுக்கோ சேருமேயன்றி அவளது ஆண் சகோதரர்களுக்கோ அல்லது ஆண்வழி வாரிசுகளுக்கோ செல்வதில்லை!

இறுதியாக இந்தச் சீதனம் தேவையா? இல்லையா என்பதைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை! அது அவரவர் விருப்பத்திற்குரியது. ஆனால் சீதனம் என்ற பெயரில் நடக்கும் பகல்கொள்ளையை தடுத்தேயாக வேண்டும்! அது நமது கடமையும் காலத்தின் கட்டாயமுமாகும்!



நன்றி 
வணக்கம்


No comments

Powered by Blogger.