Search This Blog

பெண்கள் தின சிறப்பு பதிவு - SPECIAL POST on WOMEN's DAY

இன்றைய அளவிலே முக்கியமாக பேசப்பட்டு வரும் 
ஒரு விடயமாக ஒரு கருத்தியலாக பெண்ணியவாதம் 
அல்லது பெண்களின் உரிமைகள் மற்றும் 
ஆண் பெண் சமத்துவம் தொடர்பாக பரவலாக 
பேசப்படுகின்றது. 


இவ் எண்ணகருவானது மேற்கத்தேய நாடுகளை பொறுத்தவரையில் சற்று பழைய விடயமாயினும் 
மூன்றாம் உலக நாடுகளை பொறுத்தவரையில் 
ஆண் பெண் சமத்துவம் என்பது இன்னும் கேள்விக்குரியதாகவே உள்ளது 

அந்த வகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசியல் சமூக பொருளாதார கலாச்சார மற்றும் அனைத்துவிதமான துறைகளிலும் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது 
எனினும் பல்வேறு சமூக அரசியல் பொருளாதார கலாச்சார மற்றும் மூடநம்பிக்கைகள் காரணமாக பெண்கள் இரண்டாம் தர நிலையிலேயே இன்னும் வைத்துப் பார்க்கப்படுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது 


அந்தவகையில் தடைகளை தகர்த்தெறிந்து சாதித்த 8 பெண்களை பற்றிய சிறுகுறிப்புகள் அடுத்து :


1. Valentina Tereshkova - வலன்டீனா டெரெஷ்கோவா





முதல் முறையாக விண்வெளிக்குச் சென்ற பெண் இவர். 
வலண்டீனா விளாடிமீரொவுனா டெரெஷ்கோவா எனும் இயற்பெயரை உடைய இவர் 1937 மார்ச் 6ம் திகதி ஒரு ட்ரெக்டர் ஓட்டுபவருக்கு மகளாக மத்திய ரஷ்யாவில் ஒரு கிராமத்தில் பிறந்தார்.

1961ஆம் ஆண்டு சோவியத்தொன்றியத்தைச் சேர்ந்த 'யூரி ககாரின்' மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். 
அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. 
இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. 
இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். 
மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரிவு செய்யப்பட்டார்.

வஸ்தோக்-6 [Vostok-6] என்ற விண்கலம் வலண்டீனாவை ஏற்றிக்கொண்டு 1963 யூலை 16ஆம் நாள் வானத்தை நோக்கிப் புறப்பட்டது. 
இவர் பூமிப்பந்தைச் சுற்றி 48 முறைகள், 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் வலம் வந்தார். 
அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்தார்.
விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், 
அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

யூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது,
 தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, 
பாதுகாப்பாக இறங்கினார். 
‘சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் 
‘லெனின் விருது’ வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. 
இந்த வெற்றிகளைனைத்தையும் பொதுவுடைமைக் கட்சிக்கு அர்ப்பணித்தார் வலண்டீனா.

2.  Marie Curie - மேரி கியூரி



முதல் தடவையாக இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக (Physics & Chemistry) நோபல் பரிசை வென்ற பெண்மணி இவர்.
இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867ல் பிறந்தார். 
பின்னர் பிரான்சில் வசித்தார். 
இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911ஆம் ஆண்டுகளில் பெற்றார். 
இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபரும் இவர்தான்.
இரு வேறு விஞ்ஞானத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற இரு நபர்களில் ஒருவர்.
கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என நம்பினார்
ரேடியம்-Radium[Ra], பொலோனியம்-Polonium[Po] போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 
அத்துடன் பரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.

இவரது சாதனைகளுள் முதன்மையானவை 

  • கதிரியக்கம்-Radiation ( இது இவர் உருவாக்கிய சொல்) பற்றிய ஓர் கோட்பாடு
  • கதிரியக்க ஐசோடோப்புகளை-Radioisotopes  பிரித்தெடுக்கும் நுட்பங்கள்
  • பொலோனியம் மற்றும் ரேடியம் ஆகியனவற்றை கண்டுபிடித்தல். 
  • இவரது வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
  • இவர் பரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் குயூரி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். 
  • இவை மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கிய மையங்களாக இன்று திகழ்கின்றன. 
  • முதலாம் உலகப் போரின் போது, இராணுவ துறையில் கதிரியக்க மருத்துவ மையங்களை முதன்முறையாக நிறுவினார்.


ஒரு பிரஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும்  
மேரி ஸ்க்ளோடவ்ஸ்கா குயூரி  தனது போலந்து நாட்டு அடையாளத்தை இழக்கவில்லை. 
இவர் இரண்டு குடும்ப பெயர்களையும் பயன்படுத்தினார்
தனது மகள்களுக்கு போலிஷ் மொழி கற்றுதந்தார். 
மேலும் போலந்திற்கு அவர்களை சில முறைகள் அழைத்துச்சென்றிருக்கிறார். 
தான் முதன்முதலாக கண்டுபிடித்த தனிமத்திற்கு தனது தாய்நாட்டை கவுரவிக்கும் வகையில் பொலோனியம் என்று பெயரிட்டார்.

கியூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் 
அப்லாஸ்டிக் இரத்த சோகையால், 1934 ல் இறந்தார்.

3.  Phoolan Devi - பூலான் தேவி


பொதுவா வீரப்பன் கதை நல்லா தெரிஞ்ச அளவுக்கு, 
பூலான் தேவி கதை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமான்றது சந்தேகம்.

பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் ஆகஸ்ட் 10, 1963ல் பிறந்தார்.
மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். 
ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. 
பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 
11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. 
கணவன் பெயர் புட்டிலால்
பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். 
ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.

திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். 
அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். 
ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். 
அவளை பலாத்காரம் செய்தான். 
இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். 
முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். 
இதனால் பூலான்தேவியை கைவிட்டுவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். 
சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது.

அவ்வூரில் உயர்சாதிப்பிரிவினர்க்கும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினர்க்கும் இடையே பிரச்சினை இருந்தது.
ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள். 
இவளை ஒரு கிராமமே வரிசையில் நின்று பாலியல் கொடுமைப்படுத்தியது.
வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள்.

அவளுடைய பெற்றோரை பொலிஸ் காவலர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
ஆனாலும் பூலான்தேவியின் மாமா மையாதீன் என்பவன் கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். 
இதனால் காவல் பிடியில் பூலான்தேவி சிக்கினாள். 

சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினர் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். 
கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். 
பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 
15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். 

ஓராண்டுக்குப் பின் திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான்.
அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம் மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். 
அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 
கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். 
விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான்.

1980ம் ஆண்டு ஓகஸ்ட் 13ம் தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. 
இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். 
தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான் தேவியை சிறை பிடித்து சென்று அவளது கற்பை சூறையாடினார்கள். 
பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள்  பூலான்தேவி.

இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் இருந்த வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், காவல் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. 
எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.
விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்தாள்

பூலான்தேவி  குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றார்.
மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினார்.
மிகுந்த ஆரவாரத்துடன் இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக்கூட்டத் தலைவியாக வலம் வந்தார். 
இதனால் 'சம்பல் கொள்ளைக்காரி' என்று அழைக்கப்பட்டார். 

பழிவாங்கும் கட்டத்தில்  முதல்  அத்தியாயமாக பூலான்தேவி  தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை பிடித்து வந்து  பிரம்பால் அவனை அடித்து அடித்து அவனது உறுப்பை  தனது  கால்களால் நசுக்கி ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார்.
மான்சிங் உதவியோடு தனது மாமா உட்பட தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினார்.
ஆனாலும் அவருடைய ஆத்திரம் தணியவில்லை.

1981ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்ற பூலான்  
விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினார். 
அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும்  வரிசையில் நிற்க வைத்து குருவியை சுடுவதுபோல் சுட்டார். 
அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 
8 பேர் கை கால்களை இழந்தார்கள்.

இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. 
பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. 
அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 
உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982ல் பதவியை ராஜினாமா செய்தார். 
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார் படுத்தப்பட்டன. 
காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். 
ஆனாலும் பூலான்தேவி சிக்கவில்லை.
பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் 
ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் தனது பழிவாங்கும் படலத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பூலான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்தார்.
அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது.

1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல் மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தார்.
முதலில் குவாலியர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 
பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். 
11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்தார். 

1991ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 
அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். 
என்றாலும் சிறையில் இருந்தபடியே நடிகர் ராஜேஷ் கன்னாவை எதிர்த்து டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனாலும் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. 

இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, 
பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. 
மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. 
இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பிணையில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட் நீதிபதிகள் 18.2.1994 அன்று உத்தரவிட்டனர். 

1994ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 
1994ம் ஆண்டு ஜுலை மாதம் 5ம் தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.
சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. 
இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக 
ஒரு சேவை அமைப்பை தொடங்கினார். 

பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 
1996ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா-பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். 

பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. 
கோர்ட் படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. 
இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். 
பிறகு 1999ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.
அதாவது, பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். 

"நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை எழுதினார்.
"பாண்டிட் குயின்"  எனும் சினிமா வெளிவந்த பிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார்.

2001 யூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டார். 
அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. 
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், 
அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வந்த 
சேர் சிங் ராணா என்பவன் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தான்.
பிக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி உயர்குடி நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை செய்ததாக கூறினான். 
 நீதிமன்றம் ராணாவுக்கு ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

4. Chandrika Bandaranaike Kumaratunga - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க


இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதி இவர்.
ஒட்டுமொத்தமாக இலங்கையின்  14வது பிரதமரும் 5வது ஜனாதிபதியும் 4வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமாவார். 
இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் கூட.

ஜூன் 29, 1945ல் ஒரு பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தந்தையான S.W.R.D. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். 
பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். 
ஐக்கிய தேசியக் கட்சியில் 1931ல் இணைந்த இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாயிருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.
தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டார். 
இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது என்பது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். 
தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட 
பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும் 
பௌத்த பிக்குகள் மற்றும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார். 

இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவர்தான்.
இவ்வாறு சிங்களத்திற்கும் பெளத்தத்திற்கும் அளப்பறிய சேவையாற்றிய போதிலும் சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை பௌத்த பிக்கு ஒருவராலேயே சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். 
இவரது மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

இதனை தொடர்ந்து சந்திரிக்கா பரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான பட்டபடிப்பை முடிக்கிறார். 
சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் பெறுகிறார். 

இலங்கை திரும்பிய சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 
1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, 
இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராக பணியாற்றினார். 
1974 இலங்கை சுதந்திர கட்சி பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 
1976 - 1977 காலப்பகுதியில், கொத்தணிப் பண்ணைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.
1976- 1979 காலப்பகுதியில், உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு விசேட ஆலோசகராக பணியாற்றினார்.

1978 இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவை மணந்தார்.
 குமாரணதுங்க 1988இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். 

1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். 
அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார். 

இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 
இது தோல்வியடையவே, 
பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார்.
அதுவும் தோல்வியே!

1999 ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னதாகவே சந்திரிகா தேர்தலை நடத்த திட்டமிட்டார்.
டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, 
அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி வெடிக்கச் செய்த குண்டினால் 
தனது வலது கண்ணை இழந்தார். 

அங்கீகரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிடம் அனுதாப அலைகளை ஏற்படுத்த சந்திரிக்காவால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.
எனினும் அத்தேர்தலில் சந்திரிக்கா தற்போதைய பிரதமர் 
ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இவர் ஜனாதிபதியாக இருக்கும்போதே இவரது கட்சி 2001ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைகிறது. 
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கிறது. 
இதனால் வெறுப்படையும் சந்திரிக்கா உரிய காலத்திற்கு முன்னரேயே தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்கிறார்.
2004ல் நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிட வைத்து பிரதமராக்குகிறார்.
இது ஒரு நன்றிக் கடன் சார்ந்த செயற்பாடாக கருதினார்.
பிரேமதாஷ(ஐக்கிய தேசிய கட்சி) ஆட்சிகாலத்தில் துவண்டு கிடந்த சுதந்திர கட்சிக்கு புத்துயிர் அழிப்பதற்காக  சந்திரிக்காவை  ஆரம்பத்தில் அரசியலுக்கு அழைத்து வந்தவர் மஹிந்ததான்!
மஹிந்தருக்கு சந்திரிக்காவை விட அரசியல் அனுபவம் அதிகம்.
பின்னர் 2005ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடாமல் 
(அப்போதைய அரசியல் யாப்பின்படி ஒருவர் இருதடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது!)
மஹிந்தருக்கு வாய்ப்பு தருகிறார்.

தமிழ் மக்கள் அத் தேர்தலை புறக்கணித்ததன் காரணமாக மஹிந்தர் மயிரிழையில் தப்பித்து ஆட்சியமைக்கிறார். 
பின்னர் படிப்படியாக சந்திரிக்காவை ஆட்சியிலிருந்தும் கட்சியிலிருந்தும் ஒதுக்கி இரண்டையும் தன்வசப்படுத்துகிறார்.

வெகு நாட்கள் கழித்து தான் செய்த தவறை உணரும் சந்திரிக்கா 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி மற்றும் ரணிலுடன் கைகோர்த்து மஹிந்தரை தோற்கடித்து பாடம் புகட்டினார். 

5. Florence Nightingale - ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்


நவீன தாதியியல் முறையை உருவாக்கியவர் இவர்.
தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். 
விளக்கேந்திய சீமாட்டி அல்லது கைவிளக்கேந்திய காரிகை 
(The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டவர். 
இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் கூட.

செல்வம் பொருந்திய பிரிட்டிஷ்  உயர்குடிக் குடும்பமொன்றில்  12 மே 1820ல் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார்.
இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெற்றோர் பெயரிட்டார்கள். 
தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல். 
தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல்.
இவரது தாய்வழிப் பாட்டனான வில்லியம் ஸ்மித் அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியிருக்கிறார்.

கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார். 
பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். 
இவ் விடயத்தில் தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், 
அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. 
அக் காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. 
வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். 
தாதியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் இயற்கையாகவே அக்கறை கொண்டிருந்தார். 
1844 ஆம் ஆண்டு டிசம்பரில், லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. 
இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். 
அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். 
இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், 
மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் ஜேர்மனி பயணத்தில் கண்டகெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன.

தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி 
ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது திருமண பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார். 
பின்னாளில், சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராக்ப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவருடன் நட்பானார். 
சிட்னி ஹேர்பேர்ட் ஒரு கண்ணியமான ஆண். 
எனவே இவருடன் வாழ்நாள் முழுதும் நட்பினை தொடர்ந்தார். 
கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கு ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். 
புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

1851 ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது.

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ்-ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 
1854 - 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் காயமடைந்த வீரர்களுடைய நிலைமை மோசமாக இருப்பது குறித்த அறிக்கைகள் போர் முனையில் இருந்து பிரித்தானியாவுக்குக் கசிந்தபோது புளோரன்ஸ் அது குறித்துத் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார்.

 புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது சிற்றன்னை உட்பட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 தாதியரும் துருக்கியில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் முதன்மை முகாமிற்கு நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்தனர்.
நவம்பர் தொடக்கத்தில் நைட்டிங்கேல் ஸ்கட்டாரியில் இருந்த செலிமியே முகாமுக்குச் சென்றார். 
அங்கே நிர்வாக அலட்சியத்தினால், போரிற் காயமுற்ற வீரர்கள் அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமையைக் கண்டார்கள். 
மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக் குறைவும் உயிராபத்து விளைவுக்கும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன.
 நோயாளருக்கான உணவைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இருக்கவில்லை.

புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். 
அதன் சார்பில் தீவிரமாக வாதாடியும் வந்தார். 
இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின் மருத்துவமனையையும், கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், 
நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர். 

அவருடைய முதல் மாரிகாலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். 
போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர், டைபொய்ட், வாந்திபேதி (cholera), வயிற்றோட்டம் (dysentery) ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். 
அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள், காற்றோட்டம் இன்மை ஆகியவற்றால், முகாமின் தற்காலிக மருத்துவ மனை நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது.
இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். 
இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது.

மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென 
புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். 
படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது 
வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். 
இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது.

பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். 
மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த 
மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் 
(Notes on Hospitals), 
அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் 
(Notes on Nursing)
 "உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்" 
(Notes on Matters Affecting the Health), 
"பிரித்தானிய இரணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், 
செயல் திறனும் 
(Efficiency and Hospital Administration of the British Army) 
என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில


போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். 
விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக BBC யினால் கருதப்பட்டார். 


விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று, 
படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் 
அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். 
பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை.
சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார்.

மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார்.

1858 இல் பதவியேற்றதன் மூலம் அரச தரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார்.

தனது சிந்தனைகளை 
"சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்" 
என்ற நூலாக எழுதினார். 
இந்நூல் மூன்று பாகங்களுடையது. 

மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப்படவில்லையாயினும் 
'கசான்ட்ரா' எனும் ஒரு பகுதி ரே-ஸ்ட்ரக்கி என்பவரால் 
1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு 
த கோஸ் (The Cause) எனும் பெண்ணிய வரலாற்று நூலில் 
ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

உலகத் தாதியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.

KLM விமான நிறுவனம் தங்கள் MD-11 விமானமொன்றிற்கு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை இட்டிருக்கிறது.

இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இவர் பெயரைக் கொண்டுள்ளன.

ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் 
(இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)
தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் 
கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு 
'பெட்சைட் புளோரன்ஸ்' (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.

அவர் சற்று நாட்களில் நோய்வாய்ப்பட நேர்ந்தது. 
போரில் அவரது பணியின் மூலம் ஏற்பட்ட தகைவே(மனவுளைச்சல்) அதற்கான மூலகாரணியென எண்ணப்படுகிறது.
13-8-1910ல் லண்டனில் இச் சாதனைப் பெண்மணி இறந்துபோனார்.

6. Ada Lovalace - அடா லொவலேஸ்


உலகின் முதலாவது கம்பியுற்றர் ப்ரொக்ரமர்- Computer Programer இவர்தான். 
இவர் ஒரு பெண் என்பது கூடுதல் சிறப்பு!

அடா பைரன் என்ற இயற்ப்பெயர் கொண்ட இவர் 
காதல் கவிஞர் லோர்ட் பைரன் மற்றும் மில்பன்கே என்பவர்களுக்கு மகளாக 1815ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி லண்டனில் பிறந்தார். 

அடா பத்து வயது மூத்தவரான வில்லியம் கிங் என்பவரை திருமணம் செய்தார். 
மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

அடா தன் நேரத்தை கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார். 
அவரின் கடின உழைப்புக்கு பிறகு 1828ல், 
தனது 13வது வயதில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். 
கணிதம் இவரது வாழ்கைக்கு பறக்க ஒரு சிறகைக் கொடுத்தது.

அக்காலத்தில் அனைவரும் அரசியல், கணிதம், உயிரியல், வானவியல் என பல்வேறு துறை அனுபவ அறிவைப் பெற்று இருந்தனர். 
19ம் நுற்றாண்டில் தொழில் துறை ஆராய்ச்சி என்று ஒன்று இல்லை. 
ஆகையால், ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் வேவேல் என்ற பல்துறை வல்லுனரின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். 

அக் காலத்தில் பெண்கள் இத்தகைய அறிவைப் பெற்றிருந்தாலும் அவர்கள் பெரிதும் வரவேற்கப்படவில்லை.

1833 ஆம் ஆண்டு அடா தனது 17 வயதில் 
கணினி உலகின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் பப்பேஜ்யை சந்தித்தார். 

அடாவின் கணித அறிவு மற்றும் திறனை கண்டு வியந்த  பாப்பேஜ்  தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். 

பப்பேஜ்ஜுக்கு ஒரு விசித்திர பழக்கம் இருந்தது. 
செய்துகொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு வேறு வேலையை தொடங்கிவிடுவார்.

1834 ஆம் ஆண்டு Difference Engine என்ற கணக்கிட்டு இயந்திரத்தை முடிக்கும் முன்பே அவர் 
தனது இரண்டாவது முயற்சியாக Analytical Engine உருவாக்க முடிவு செய்தார். 

இவர் தனது இரண்டாவது ஆராய்ச்சி நிதிக்காக நாடாளுமன்றத்தை அணுகும் பொழுது 
உறுப்பினர்கள் முதல் ஆராய்ச்சியை முடிக்காமலே இரண்டாவதை தொடங்குவதை எதிர்த்தனர். 
இதனால் மனமுடைந்த பப்பேஜுக்கு அடா தைரியமூட்டினார்.

பாபேஜ்க்கு வெளிநாட்டு ஆதரவும் கிட்டியது. 

1842 ஆம் ஆண்டில், இத்தாலிய கணிதவியலாளர், 
லூயிஸ் மினிப்ரே தனது Analytical Engine ஆய்வுகளை வெளியிட்டார். 

லூயிஸ் மினிப்ரேவின் ஆய்வை தொடர்ந்து 
பாபேஜ்யும், அடாவும் இணைந்து Analytical Engine ன் 
முதல் புரோகிரமை எழுதினார்கள். 
இது அடாவிற்கு நீடித்த புகழைத் தேடிக்கொடுத்தது. 

பாப்பேஜ்யின் இயந்திர திட்டங்களை புரிந்து அல்கோரிதங்களை (Algorithms) எழுதுவதில் அடா சிறந்து விளங்கினார். 
மேலும், அடா 
"பப்பேஜின் கணனி பொது நோக்கத்திற்காக கணினி என்றும் 
மிக சிக்கலான செயல்பாடுகளை (Complex Problem) தீர்க்க உதவும்" 
என்றும் கூறினார்.
இதன் மூலம் இருவருக்குமிடையிலான நட்பு மேலும் வலுவடைந்தது.

அடாவை  பெருமைப்படுத்தும் விதமாக 
அமெரிக்க இராணுவம் கண்டுபிடித்த கணணி மொழிக்கு 
இவர் பெயரை சூட்டியது.

கணினி உலகின் ஒப்பற்ற பெண்ணாய் திகழ்ந்த அடாவை பெருமைப்படுதும் விதமாக 
பிரிட்டிஷ் டிஜிட்டல்-உரிமைகள் ஆர்வலர் அன்டர்சன்  ஒக்டோபர் 11 அன்று அடா லோவ்லேஸ் தினம் கொண்டாடப் படுமென்று அறிவித்தார்.

கடந்த 2009 ஆண்டு முதல் அடா லோவ்லேஸ் தினம் கொண்டப்படுவது பெண்ணுலகிற்கு கிடைத்த பெருமை என்றால் மிகையல்ல.

1852ம் ஆண்டு தனது 37 வது வயதில் அடா லண்டனில் புற்றுநோயால் இறந்தார். 

7. Susanthika Jayasinghe - சுசந்திகா ஜயசிங்க


ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இலங்கை பெண்மணி  இவர்
1948 இன் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இலங்கையரும்  இவர்தான்.

டிசம்பர் 17- 1975ல் பிறந்தார். 
100 மற்றும் 200 மீட்டர் குறுந்தூரப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றவர். 

2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்
ஆரம்பத்தில் இவரிற்கு மூன்றாம் இடமே கிடைத்தது 

எனினும் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியன் ஜோன்ஸ் 
ஊக்கமருந்து சேதனையில் சிக்கியமையால் 
அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது 
இதையடுத்து சுசந்திகாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

2006ல் டோகாவில் நடைபெற்ற 15வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 
100மீ ஓட்டப் பந்தயத்தில் சுசந்திகா வெள்ளிப் பதக்கம்,
 200மீ பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.


இவர் 2007ல் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் 22.63 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.


8. Jayalalithaa Jayaram - ஜெயலலிதா ஜெயராம்



தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாட்டின்  முதல் பெண் முதலமைச்சர் இவர்.

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர் 
பிப்ரவரி 24, 1948ல் கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தார்.

இவர் ஒரு பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்
அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ள இவரைப் "புரட்சித் தலைவி" மற்றும் "அம்மா" என இவரது ஆதரவளர்கள் அழைப்பர்.


1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
முன்னாள் முதல்வர் M.G. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பின்னர் 
அவரது அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை அறிவித்துக் கொண்டார். 

ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவர் தமிழக முதலமைச்சராக 
1991 முதல் 1996 வரையும், 
2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், 
பின்னர் 2002 முதல் 2006 வரையும், 
2011 முதல் 2014 வரையும் இருந்தார். 
2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். 

இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ரூ.66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், 
2014 செப்டம்பர் 27 இல் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

இதனால் பதவியில் இருக்கும் போதே பதவியில் இருந்து அகற்றப்பட்ட முதலாவது இந்திய மாநில முதல்வரும் இவர் ஆகிறார்.

2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி C.R.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

இதனால் 5-வது முறையாக ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இரும்பு நெஞ்சம் கொண்ட தைரியமான பெண்மணி இவர். 


***

No comments

Powered by Blogger.