How to Read? - எப்படி வாசிக்க வேண்டும்?
வணக்கம் நட்பூஸ்...@!!@
வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும் என்ற பிரபல்யமான கருத்தை அறிவீர்கள். என்றாலும் இந்த வாசிப்பில் நம்மில் பலரும் கோட்டை விடுகிறோம். இதனால் தான் கற்றல் என்பது புரியாத புதிராக எங்களுக்குள் உருவெடுத்து இருக்கின்றது. கல்வி கற்பதில் வாசிப்பு முக்கியமான அங்கமாக
கருதப்படுகிறது.
புத்தகம் படிப்பது என்பது எளிதான விடயமல்ல. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது? ; எப்படிப் படிப்பது? ; ஏன் சில புத்தகங்கள் புரிந்து விடுகின்றன? ; சில புத்தகங்கள் ஏன் புரிவதேயில்லை? ; ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வெவ்வேறு விதமாகப் படிக்கப் படிகிறது? ; சில புத்தகங்கள் ஏன் பல வருடங்களாக யாவருக்கும் பிடித்திருக்கின்றது? ; புத்தகம் படிப்பதனால் என்ன பயன் இருக்கிறது? ; இப்படி வாசிப்பு தொடர்பாக பல கேள்விகளும் நம் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன!
புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே! அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது.
எது நல்ல புத்தகம் என்று அறிய நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரைசெய்யலாம். மற்றப்படி இப்படிப் படி ; இப்படிப் படித்தால் மட்டுமே புரியும்… என்றஅறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக் கூடியதல்ல!
எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பு அதைப் பற்றிய முன் முடிவுகள் வேண்டாம். திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்லுவதற்காகப் படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்காரவைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதுபோன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே!
ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ அல்லது பிரபலமாக இருப்பதாலோ அது நல்ல புத்தகமாக இருக்கப் போவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்கள் மனதுமே. அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக் கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தெரிவு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும் ; நேரமும் ; விருப்பமும் ; பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை!
எழுத்தையும் - எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்துகொள்ளுவது எளிதானதல்ல. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விடயங்கள் முக்கியமானவை!
அவை
- அகப்பார்வை
- கற்பனை
- கற்றல்
என்பவையாகும்!
அகப்பார்வை என்பது நாம் எதை வாசிக்கின்றோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்ளுவதாகும்.
கற்பனை என்பது படைப்பினுடாக வெளிப்படுத்தும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகள் என்பவற்றை கற்பனை செய்து புரிந்து கொள்ளுகின்ற இயல்பாகும்.
கற்றல் என்பது எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவதாகும். இதுதகவலாகவோ,அறிவுத் தொகுப்பாகவோ, உண்மையாகவோ,வாழ்வியல் அனுபவமானவோ இவ்வாறு எவ்விதமாகவும் இருக்கலாம். அதைநாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்!
ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்சகாலம் கழித்து மறுபடியும் வாசித்துப்பாருங்கள். அப்பொழுதும் புரியவில்லைஎன்றால் இன்னும் கொஞ்சநாள் காத்திருங்கள் அதற்காக புத்தகம் தவறானது ; இது நமக்கு புரியாது என்றமுடிவிற்குஅவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்னும் புரிந்துகொள்ளப்படாமலே இருக்கின்றன. கண்ணால் மரத்தைப் பார்த்துவிடமுடியும், ஆனால்அதன் வேர்களை பார்த்துத் தெரிந்துகொள்ளமுடியாது! அப்படித்தான் புத்தகங்களும்!
புத்தகங்ளுடான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது, எந்தக் கணங்களில் அது வாசகனை ஒன்றினைக்கின்றது, எந்தநிலைகளில் வாசகனை மீறிச் செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாகஅவதானிக்கின்றான்.
புத்தகத்தின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கின்றது. புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே புத்தகவாசிப்பின் பெரியசவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது!
அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காகஎழுதப்பட்டிருக்கிறது? என்று புரிந்துகொள்ளாமல் போவது வேறு. ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்கும். அல்லது எந்தப் பொருள் பற்றி பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றதாகவோ, ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய பயிற்சி தேவைப்பட்டதாகவோ இருக்கக்கூடும். அல்லது அந்த கதையோ, கவிதையோ எதைப் பற்றி பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக இருக்ககூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்க கூடும். அந்த புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளை புரிந்துகொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை தொடந்து வாசித்தலும், புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றது.
வாசிப்பது என்பது ஒரு பெரிய மரம் ஒன்றை தூரத்தில் இருந்துபார்த்து அதுவொரு பெரியமரம் என்று சொல்லிக் கடந்துபோவதைப் போல எளிதான விடயமல்ல. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல,உடன் வேலை செய்யும் ஒருவனைப் போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.
ஒரு நண்பனைப் போல அதனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு சிறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மை போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!
புத்தகத்தை புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிப் பார்ப்பதே சிறந்தது. காரணம் அப்போதுதான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை, எந்த சொல்லை எப்படி பயன்படுத்துகிறோம்? அதில் எவ்வளவு சிரமம் ; சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும். ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத பொருட்கள், நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கப்படுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினைக் கொண்டாடுகிறான்.
ஒவ்வொரு புத்தக வாசிப்பும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது. இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காதல், மூப்பு, அதிகாரம், வெற்றி, தோல்வி, விதி என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடையைத் தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும், சகமனிதனை புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது. அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், வெறுமை, இயலாமை யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்று கொள்ளவைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது.
ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னச் சிறிய ஆவணங்கள். அவற்றை வாசிப்பதன் வழியே மனிதர்கள் கடந்த காலத்தை அறிந்து கொள்ளமுடியும், நிகழ்காலத்தை சந்திக்க துணை கொள்ளலாம், எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.
எல்லா புத்தகங்களையும் எல்லோரினாலும் வாசித்துவிட முடியாது . உங்களால் முடியும் என்றபோது முயற்சித்துப் பாருங்கள்! அதுவே சாதனைக்கு வழி வகுக்கும்!
நன்றி
வணக்கம்
Post a Comment