Search This Blog

The War of The Tiger - புலியின் போர்


டில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து அந்த புலி சம்பவம் பற்றி செய்திகள் படித்திருப்போம்...

அந்த நிகழ்வின் தடயவியல் அறிக்கை வந்துள்ளதாம், அதன் படி, மேலே இருந்த பார்வையாளர்களின் கல்வீச்சில் இருந்து அவனை காப்பாற்றவே அந்த பையனை கவ்வி ஓரமாக கொண்டு சென்றுள்ளது...

காரணங்கள்
  • கல் எறியாத முதல் 15 நிமிடம் வரை புலி அவனை 1 அடி தள்ளியே நின்றுள்ளது.
  • புலிகள் தன் குட்டிகளை பிற மிருகங்களிடம் இருந்து காப்பாற்ற இது போன்று தான் கவ்வி செல்லும், புலியின் பற்கள் 18% மட்டுமே அவன் கழுத்தில் இறங்கியுள்ளது.
  • கற்கள் விழுவது குறையும் வரை, அவன் மீது பட்டுவிடாத மாதிரி மறைத்து நின்றுள்ளது.
  • அந்த பல் தடயங்களை விட, உடம்பில் வேறு எங்கும் ஒரு கீறல் கூட இல்லை (மேல் இருந்து விழுந்ததை தவிர்த்து)


விலங்கியல் பூங்காவில் மாமிசம் தின்று வளர்ந்த புலி, சாப்பிட வேண்டும் என நினைத்திருந்தால் ஒரு பாகம் கூட மிஞ்சிருக்காது.

அந்த புலியின் தவறு, தன் குட்டிகளை போலவே இவனுக்கும் தடித்த தோல் பிடிப்பு இருக்கும் என எண்ணியது மட்டுமே..


     மனிதர்களை உண்ணும் மிருகமாக ஒரு புலி எப்போது மாறுகிறது? இயற்கையிலேயே தனக்கு அந்நியமான, மாறுபட்ட ஒரு உணவான மனிதனை எப்படிப் புலியால் தின்ன முடிகிறது? தொண்ணூறு சதவிகிதக் காரணம், ஒரு புலிக்கு ஏற்படும் காயங்கள். குறிப்பாக துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தப்பட்ட புலி, துப்பாக்கிக்குண்டு உள்ளேயே இருப்பதால் கால்களையோ உடலையோ அசைக்கும்போது வலி ஏற்பட்டுப் பிற மிருகங்களை வேட்டையாட முடியாமல் போகிறது. அதேபோல் சில சமயங்களில் முள்ளம்பன்றிகளை வேட்டையாடும்போது அதன் முட்கள் கால்களில் நன்றாக உள்ளே தைத்துவிடுவதாலும் அந்தக் காயங்கள் பெரிதாகி, பிற மிருகங்களைத் துரத்த முடியாமல் பல நாட்கள் பட்டினி கிடக்கும் சூழல் புலிகளுக்கு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் தற்செயலாகக் காடுகளில் சுள்ளிகள் சேகரிக்க வரும் மனிதர்களைப் பார்க்கும் புலிகள், எதேச்சையாக அவர்களைக் கொல்ல நேரிட்டு, முதன்முறையாக மனித மாமிசத்தை சாப்பிட்டுப் பழகி, இதன்பின் மனிதர்களை எளிதில் கொல்லமுடியும் என்று தெரிந்துகொண்டே மனித வேட்டையர்களாக மாறுகின்றன.






               இல்லையெனில், வயதாகும் காரணத்தாலும் புலிகள் மனிதனை வேட்டையாடத் துவங்குகின்றன. புலிகளுக்கு வேட்டையாடும்போது பெரிதும் உதவுவது, மிருகங்களைத் தாக்குவதில் உள்ள வேகம்தான். இதன்பின்னர்தான் அதன் பற்களும் நகங்களும். சராசரியாக எட்டு அடி நீளமும் 250 கிலோ எடையும் உள்ள ஒரு புலி, மிகவேகமாக ஒரு மிருகத்தின் மீது பாய்ந்து அதனை அடிக்கும்போது ஒரே நொடியில் அந்த மிருகம் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். இப்படித் தாக்கும்போது முதலில் அந்த மிருகத்தின் குரல்வளையை ஆழமாகக் கடிக்கிறது புலி. இதன்பின் அந்த மிருகத்தைக் காட்டுக்குள் எங்காவது தூக்கிச்செல்கிறது. நன்கு வளர்ந்த ஒரு எருமைமாட்டின் பின்னங்கழுத்தையோ அல்லது முதுகையோ கடித்து வாயாலேயே அதனைப் பல மைல்கள் புலிகள் தூக்கிச்சென்றிருப்பதை... புலிகள் அத்தனை பலசாலிகள்.







      எனவே, அதன் நகங்களும் பற்களும் எதாவது ஒரு சூழ்நிலையில் உடைந்துவிழும்போது இரையை நன்றாகக் கடித்து வேட்டையாடப் புலிகளால் முடியாமல் போகிறது. இதனாலும் ஏமாளி மனிதர்களை வேட்டையாட ஆரம்பிக்கின்றன. ஆனால், என்னதான் மனிதர்களைத் தின்றாலும், இயல்பில் மனிதன் என்பவன் புலியின் மெனுவில் இல்லவே இல்லை. எனவே மனிதனை ஒரு புலி வேட்டையாடுகிறது என்றால் அது முற்றிலும் சந்தர்ப்பசூழ்நிலையால் ஆனதுதான்!



              உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட புலி (முக்தேசர் ஆட்கொல்லிப் புலி) மிகவும் இளம் வயதான பெண் புலி. ஒரு நாள் முள்ளம்பன்றி ஒன்றை வேட்டையாடுகையில் அதன் முன் பாதங்களில் கிட்டத்தட்ட ஐம்பது பெரிய ஐந்தங்குல முட்கள் நன்றாக ஏறி உள்ளே தைத்து எலும்பில் பட்டு வளைந்து வெளியே வந்திருக்கின்றன. இதனால் சரியாக நடக்க இயலாமல், அந்த முட்களை வாயால் கடித்து வெளியே இழுக்க முயற்சி செய்திருக்கிறது அந்தப் புலி. அப்போது இன்னும் காயங்கள் பெரிதாகியிருக்கின்றன. ஒரு புதருக்குள் அமர்ந்து இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, அங்கே ஒரு பெண் அந்தப் புதரின் செடிகளை அறுக்க வந்திருக்கிறாள். முதலில் அந்தப் பெண்ணைப் புலி கண்டுகொள்ளவில்லை. காரணம் அந்தப் பகுதியில் மனிதர்களைப் புலிகளும், புலிகளை மனிதர்களும் எதிரிகளாகப் பாவிப்பதில்லை. காட்டுக்குள் மனிதர்கள் நடமாடும்போது எதிர்ப்படும் புலி அவர்களைக் கடந்து நடந்துபோவதெல்லாம் சர்வசாதாரணம். ஆனால் அந்தப் பெண், புலியை வெகுவாக நெருங்கி, கையில் உள்ள அரிவாளால் வேகமாகச் செடிகளை வெட்ட ஆரம்பிக்க, அந்தப் பெண்ணைத் தனது முன்னங்கையால் சற்றே வேகமாகத் தள்ளிவிட்டிருக்கிறது அந்தப் புலி. உடனேயே தன்னை அடித்தது எது என்றே தெரியாமல் அந்த நொடியிலேயே அவள் மண்டை நொறுங்கி இறந்துவிட்டாள். இதைப் பார்த்து பயந்த அந்தப் புலி அங்கிருந்து நொண்டிக்கொண்டே ஓடி, ஒரு மைல் தொலைவில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அடியே இருந்த ஒரு பெரிய பொந்தில் தங்கிவிட்டது. ஆனால் விதிவசத்தால் மறுநாள் அங்கேயே வந்து ஒரு ஆள் அந்த மரத்தை வெட்டத் தொடங்க, அவனது முதுகில் ஒரு பலத்த அறை விட்டு அவனை அந்தப் புலி கொன்றிருக்கிறது. ஆனால் அப்படி அறைந்தபோது அவன் முதுகில் இருந்து வழிந்த ரத்தம் ஏற்கெனவே காய்ந்த வயிற்றோடு இருந்த புலியின் பசி உணர்வைத் தூண்ட, அவனது முதுகைக் கடித்துப் பார்த்திருக்கிறது. இதன்பின் மறுநாள் வேண்டுமென்றே இன்னொரு மனிதனைத் தானாகக் கொன்று தின்றிருக்கிறது அந்தப் புலி. அன்றிலிருந்து மொத்தம் 24 மனிதர்களைக் கொன்ற அந்தப் புலி, இறுதியில் வேட்டையாடப்பட்டது.



                     முள்ளம்பன்றிகளைக் கொல்வது பற்றி சுவையான ஒப்பீடு ஒன்று உள்ளது. பொதுவாகப் புலிகள் முள்ளம்பன்றிகளின் மேலே பாய்ந்தே அவற்றைக் கொல்லும். இதனால் முன்னங்கால்கள், நெஞ்சு போன்ற இடங்களில் முட்கள் தைப்பது சர்வசாதாரணம். ஆனால் சிறுத்தைகள் எப்போதும் முள்ளம்பன்றியின் முன்னால் போய் அவற்றின் முகத்தைக் கடித்தே அவற்றைக் கொல்லும். இதனால் அவற்றின் உடலில் ஒரு முள் கூடத் தைக்காது. இயல்பிலேயே மிகவும் புத்திசாலியான மிருகமான புலிக்கு ஏன் இந்த எளிய உண்மை தெரியாமல் போய்விட்டது என்பது கேள்வி?

                         சரி. புலிகள் ரத்தவெறி பிடித்தவை என்பது உண்மையா? இல்லவே இல்லை. தனக்குப் பசிக்கும்போது மட்டும்தான் புலிகள் வேட்டையாடும். அதேபோல், கொல்லப்படும் வேளையை வைத்தே கொன்றது புலியா அல்லது சிறுத்தையா என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். பகலில் கொன்றிருந்தால் அது புலி. காரணம் மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்ததில் இருந்து புலிக்கு மனிதன் மேல் இருக்கும் பயம் போய்விடுகிறது. ஆனால் சிறுத்தைக்கு என்னதான் மனிதர்களைக் கொன்றாலும் பயம் போவதில்லை. எனவே இரவில் மட்டும்தான் சிறுத்தை மனிதனைக் கொல்லும்.
எனவே, தன்னை யாராவது சீண்டினால் மட்டுமே புலி திருப்பித் தாக்கும்; இல்லையேல் அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் இல்லை என்பது உறுதியான முடிவு.

            தேவையில்லாமல் புலிகளைக் கொல்லக்கூடாது. எப்போது ஒரு புலி மனிதர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறதோ, அப்போதுதான் அவற்றைக் கொல்லலாம். அப்போதுகூட நூறு மடங்கு உறுதியாகப் புலியை அடையாளம் தெரிந்தால்தான் கொல்லவேண்டும்.

                        புலிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள அவை விட்டுச்செல்லும் தடயங்கள் மிக அவசியமானவை. இந்தத் தடயங்களைக் கிட்டத்தட்ட ஷெர்லக் ஹோம்ஸ் போலத் துப்பறிந்து புலிகளைப் பற்றிக் கண்டுபிடிப்பது இயல்பு. அதன் பாதத்தின் தடத்தை வைத்தே அது ஆண்புலியா பெண்புலியா, அந்தப் புலியின் வயதும் எடையும் என்ன, அந்தப் புலிக்கு என்ன பிரச்னை (அல்லது) எதனால் அது ஆட்கொல்லிப் புலியாக மாறியது என்பதெல்லாம் கச்சிதமாகக் கண்டுபிடிப்பது கைவந்த கலை. அதேபோல் காட்டில் பல தடங்கள் இருந்தாலும் தான் தேடிவந்த புலியின் தடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்தல் அவசியம்!



                      புலிகள், காட்டின் செடிகொடிகளோடு இயைந்துகொண்டு மறைவதில் கில்லாடிகள் . 
மிக அருகே புலி ஒளிந்துகொண்டிருக்கிறது என்னும்போது அதனிடம் இருந்து தப்பிக்க என்னசெய்யவேண்டும்? முதலில் எந்த அசைவும் இருக்கக்கூடாது. புலி எப்போதும் பின்னால் இருந்துதான் பாயும் என்பதால் சற்று நேரம் அசையாமல் நின்றுவிட்டுப் பின்னர் மெதுவாக நகர ஆரம்பித்து, புலி எந்தப்பக்கம் இருக்கிறதோ அந்தப்பக்கம் பார்த்துக்கொண்டே அந்த இடத்தைத் தாண்டும்வரை பக்கவாட்டிலேயே நடக்கவேண்டும். மீறிப் புலிக்கு முதுகைக் காட்டிவிட்டால் ஒரே பாய்ச்சலில் நம்மைக் கொன்றுவிட்டு, கவ்விக்கொண்டு ஓடிவிடும். அப்படி நடப்பதிலும் மிக மிக எச்சரிக்கையுடன் மெதுவாகத்தான் செல்லவேண்டும். வேகமாக நகர்ந்தாலும் ஆபத்து.

                         சில சமயங்களில் காட்டில் புலி எங்கே இருக்கிறது என்பது தெரியாது. அப்போதெல்லாம் சீதால் (Chital or Cheetal) என்ற மான்களின் குரல்தான் வழிகாட்டி. புலிகளைப் பார்த்துவிட்டால் இந்த மான்கள் குரைப்பதை (ஆம். இந்த மான்கள் குரைக்கும் வகையைச் சேர்ந்தவை) நிறுத்தாது. இதனால் சீதால் விடாமல் குரைத்தால் அங்கே புலியோ சிறுத்தையோ உள்ளது என்பது அர்த்தம். அதேபோல் மரத்தில் இருக்கும் குரங்குகளும் புலியோ சிறுத்தையோ வந்தால் கத்திக் கூப்பாடு போட்டு அவற்றைக் காட்டிக்கொடுத்துவிடும். அதேசமயம் மனித நடமாட்டம் இருந்தாலும் இவை கத்தும் என்பதால் புலிக்கும் மனிதனின் இருப்பை இவை காட்டிக்கொடுத்துவிடும் தன்மை உடையன.



                            ஒரு புலி எப்படி வேட்டையாடும்? பொதுவாகப் புலிகள் காட்டில் வீசும் காற்றை இயல்பாகவே பயன்படுத்தும் தன்மை வாய்ந்தவை. அதாவது, காற்று வீசும் திசையில்தான் எப்போதும் புலிகள் முன்னேறும். இதனால், காட்டில் ஒரு வேட்டைக்காரர் நுழையும்போது அங்கே வீசும் காற்றின் தன்மை தெரிந்தால்தான் புலியை வெல்லமுடியும். உதாரணமாக, புலியைத் தேடிக் காட்டுக்குள் நுழையும்போது காற்று வீசும் திசையிலேயே வேட்டைக்காரர் நடந்துசென்றால், புலி அவருக்குப் பின்னால் எங்கோ பதுங்கியிருக்கிறது என்றுதான் அர்த்தம். மெல்ல மெல்லக் காற்றுவீசும் திசையிலேயே அது அவரைப் பின்தொடரும். இதிலிருந்து தப்பிப்பது எப்படியென்றால், காற்றுவீசும் திசையில் எதிராகத் திரும்பிக்கொண்டு பின்னாலேயே நடந்து செல்வதன் மூலம்தான். புலி எப்போதும் முகத்துக்கு நேராகப் பாயாது. அதேபோல் ஒரேயடியாகக் காற்றுவீசும் திசையை நோக்கி நடந்துசெல்லாமல், சற்றே பக்கவாட்டில் திரும்பி நடப்பதன்மூலம் பின்நால் இருக்கும் புலியை இடப்புறமோ வலப்புறமோ இருக்கும்படிச் செய்துகொண்டு நடக்கமுடியும்.

                           புலியோடு போராடி வென்ற மனிதர்களைச் சந்திப்பது மிகக்கடினம். ஒருமுறை மரக்கிளையில் அமர்ந்து வெட்டிக்கொண்டு இருந்த மனிதன் ஒருவனைக் கீழே இருந்து பின்னங்கால்களால் நின்றுகொண்டு முன்னங்கைகளால் இழுத்துக் கீழே தள்ளி, அவனது தலையைத் தனது வாயால் கவ்விக்கொண்டு, அவன் வயிற்றின்மேல் படுத்திருக்கிறது ஒரு பிரம்மாண்டமான புலி (புலியின் நீளம் குறைந்தபட்சம் எட்டரை அடி. அதன் எடையோ 250 கிலோ இருக்கலாம்). அவனது தலை கொடூரமாக வலித்துக்கொண்டிருக்கிறது. அதன் பற்கள் இவன் மண்டையோட்டுக்குள் பதிந்திருக்கின்றன. மெல்ல உள்ளேயும் இறங்குகின்றன. இந்த ஆள் நல்ல உயரம். அதற்கேற்ற எடையும் கூட. வலியில் திமிறிக்கொண்டே, இரண்டு கால்களின் பாதங்களையும் மெல்லப் புலியின் வயிற்றில் பதித்து, அதனை உதைத்துக்கொண்டே எழுந்து நின்றிருக்கிறான். அதாவது, புலி அவன் மேல் படுத்திருக்கிறது – அப்படியே அதனை உதைத்துக்கொண்டே எழுந்து நின்று, ஒரே தள்ளாக அதைக் கீழே இருக்கும் பள்ளத்தில் தள்ளியிருக்கிறான். அவனது முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது. புலியின் வாயோடு அவனது முகத்தின் சதை சென்றுவிட்டது. இருந்தாலும் உயிர்பிழைத்து, கிராமத்துக்கு ஓடியிருக்கிறான். அங்கிருந்து பல மைல் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அவனை கிராம மக்கள் எடுத்துச் சென்றிருக்கின்றனர். மிகமிக ஆச்சரியகரமாக, காயம் செப்டிக் ஆகாமல் இருக்கிறது. உயிரும் பிழைத்துவிட்டான்.



                  பொதுவாகச் சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்வார்கள். புலியின் நெற்றியில் 王 என்ற அடையாளம் போல இருக்கும். அது சீனா எழுத்தில் அரசன் என்பதை குறிகும். வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது, அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தைக் கொன்றுவிட்டது, இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது.



நன்றி 
வணக்கம்

No comments

Powered by Blogger.