Search This Blog

The Budget? or The Election Project? - வரவு செலவுத் திட்டமா? அல்லது தேர்தல் திட்டமா?

வணக்கம் நட்பூஸ்...@!!@

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (FRIDAY, 24 OCTOBER 2014) பிற்பகல் 01.30 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 



இது இலங்கையின் 69 வது வரவு செலவுத் திட்டம் என்பதோடு, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவினால் முன்வைக்கப்படும் 10வது வரவு செலவுத்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



வரவு செலவுத் திட்டம் என்றாலே இயல்பாகவே மக்களுக்குள் இனம்புரியாதவோர் எதிர்பார்ப்பினை தூண்டி விட்டு விடுகிறது. இது இலங்கையின் ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் இடம்பெறுகின்ற ஒன்றுதான் என்றாலும் அண்மைக்கால தளம்பல் நிலை பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டங்களைப் பற்றி மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையும் பற்றிக்கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

உண்மை இப்படியிருக்க "சகல தரப்பினரதும் யோசனைகள், கருத்துக்கள் என்பவற்றின் அடிப்படையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அபிவிருத்தி சார்ந்த மக்கள் நல வரவு செலவுத் திட்டமாக இது அமையும்" என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி 

"விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவித்த மக்களை மீட்க இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையானது, நாட்டில் நிலவிய தீவிரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். மேலும் இந் நடவடிக்கை எந்தவொரு இனத்திற்கும் எதிரான நடவடிக்கை அல்ல... 

இதனால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமாதானம் கிட்டியது, இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்த நடவடிக்கை எடுத்தோம், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது,  3000க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்.

மேலும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினோம். நாட்டின் பொருளாதாரம் எட்டு சதவீத வளர்ச்சியடைந்துள்ளதோடு பாதுகாப்பு செலவீனங்கள் 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன" எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 



இங்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் சில


  1. ஹோட்டல் மற்றும் சிறு, நடுத்தர கைத்தொழில்களுக்கான மின்சாரக்கட்டணம் 25 சதவீதம் குறைப்பு 
  2. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள சுகாதார மட்டத்திற்கு ஏற்ப நாட்டின் சுகாதார தரத்தையும் உயர்த்த நடவடிக்கை. 
  3. குழந்தைகளுக்கான மந்தபோசனையை கட்டுப்படுத்த நடவடிக்கை 
  4. பிரசவத்தின் போது தாய், சேய் உயிரிழப்புக்கள் அற்ற நாடாக இலங்கையை உருவாக்க நடவடிக்கை. 
  5. நாட்டின் தனிநபர் வருமானத்தை 2015ம் ஆண்டில் 4000 அமெரிக்க டொலராகவும் 2020இல் 7500 அமெரிக்க டொலராகவும் அதிகரிக்க எதிர்பார்ப்பு.
  6. வீடுகளுக்கான நீர் வழங்கள் திட்டத்தில், முதல் 25 அலகுகளுக்கு அறவிடும் கட்டணம் 10 சதவீதத்தால் குறைப்பு. 
  7. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விஷேட வரி அறிமுகம். 
  8. கெசினோ சூதாட்ட விடுதிக்குள் பிரவேசிப்பதற்கான கட்டணமாக ஒருவருக்கு தலா 100 அமெரிக்க டொலர்களை அறவிட தீர்மானம். 
  9. ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் யோசனை. 
  10. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியமான 350 ரூபா தொடர்ந்தும் அமுலில் இருக்கும் 
  11. ஒரு கிலோ நெல்வின் உத்தரவாத விலையை 34இல் இருந்து 40 ஆக உயர்த்த தீர்மானம். 
  12. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால் மாக்களின் விலை 100 ரூபாவால் குறைப்பு 
  13. உள்நாட்டில் தயாரிக்கப்படும் யோகட்டின் விலை 3 ரூபாவால் குறைப்பு. 
  14. ஒரு லீட்டர் பசும்பாலை 60 ரூபா வரை விற்பனை செய்ய நடவடிக்கை 
  15. குழந்தைகளுக்கான பால்மாவுக்கான இறக்குமதி மீதான வரி நீக்கம். 
  16. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபா விஷேட கொடுப்பனவு. 
  17. ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 5000 ரூபா விஷேட கொடுப்பனவு. 
  18. சிறுநீரக பாதிப்புள்ள நோயாளர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கப்படும். 
  19. வெற் வரியை 11 வீதமாக குறைக்க தீர்மானம். 
  20. நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளின் வைத்தியப் பரிசோதனைகளுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  21. அடுத்த வருடம் ஜனவரி முதல் மகாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு 4000 ரூபாவாக அதிகரிப்பு. 
  22. இலங்கையில் முதியவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 2015 ஜனவரி முதல் 1000ரூபாவில் இருந்து 2000 ரூபா வரை அதிகரிப்பு. 
  23. வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்களுக்கு விசேட ஓய்வூதியத்திட்டம். 
  24. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 3000 ரூபாய். 
  25. மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடசாலை செல்ல மாதாந்தம் 750 ரூபாய்.
  26. ஓய்வூதியம் பெரும் முதியவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு அரச வங்கிகளில் 12 வீத வட்டி. 
  27. மேலும் அரச ஊழியர் ஒருவருக்கான அடிப்படைச் சம்பளம் 15000 ரூபாவாக அதிகரிப்பு. 
  28. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைப்படிச் செலவை 2200 ரூபாவால் அதிகரித்து 10,000 ரூபாவாக்க தீர்மானம். இதன்படி அரச ஊழியர் ஒருவரின் ஆகக் குறைந்த வருமானம் 25000 ரூபாவாக இருக்கும் 
  29. ஊழியர் சேமலாப நிதி 14 சதவீதமாக அதிகரிப்பு. 
  30. இராணுவம் மற்றும் பொலிஸ் சேவையில் பிள்ளைகள் உள்ள பெற்றோருக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 1,000 ரூபாய். 
  31. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 500 – 1500 ஆக அதிகரிப்பு 
  32. ஒரு கிலோ றப்பருக்கான நிர்ணய விலை 300 ரூபாவால் அதிகரிப்பு. 
  33. சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிப்பு. 
  34. முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டம் 


கிராமியப் பொருளாதார மேம்பாட்டுக்கு கணிசமான நன்மைகளைப் பெற்றுத்தருவதாய் அமைந்துள்ள இவ்வரவு செலவுத் திட்டமானது தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களுக்கு இருட்டடிப்பு  செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது. 



1689 பில்லியன் ரூபாவை மொத்த தேசிய வருமானமாகவும் 2210 பில்லியன் ரூபாவை மொத்த தேசிய செலவினமாகவும் கொண்டுள்ள 2015 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதாரக் கொள்கை திட்டமானது 521 பில்லியன் ரூபாவை  நாட்டு மக்களின் தலைகளிலும் தோள்களிலும் சுமையாகவே ஏற்றி வைத்திருக்கிறது.

தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றதான ஜனாதிபதித் தேர்தல் ஒன்று ஜனவரி மாதத்தில் இடம்பெறவிருப்பதாக அனுமானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நவம்பர் மாதத்தின் முற்பகுதியில் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு - செலவுத் திட்டம் இம் முறை இரு வாரங்களுக்கு முன்பதாகவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அது மாத்திரமின்றி வரவு செலவுத் திட்ட விவாத நாட்களை 18 தினங்களுக்குள் வரையறுப்பதற்கும் அரசு தீர்மானித்திருந்தது. எனினும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவாத நாட்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதேவேளை சனிக்கிழமை முதல் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் ஆரம்பமாகி நவம்பர் ஒன்று வரை முதலாம் வாசிப்பு மீதான விவாதமும் நவம்பர் 1 முதல் 22 வரை குழுநிலை விவாதமும் இடம்பெறும்.

எப்படி இருப்பினும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதியே வரவு - செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் கிடைக்கவிருக்கின்றது.

அதற்கு முன்பதாக ஜனாதிபதியின் பிறந்த நாளான நவம்பர் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அதன் பின்னர் ஜனவரி மாதம் 09 ஆம் திகதியில் தேர்தல் இடம்பெறும் என்றும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இது எந்தளவில் உண்மை பொதிந்திருக்கின்றது என்பது பொறுத்திருந்து  பார்க்க வேண்டியதொன்றாகும்.

நிலைமை இப்படியிருக்கையில் தான் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கென வகுக்கப்பட்ட திட்டமாக அமைந்துள்ளதென எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.

Mr.Ranil Wikramasinghe
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாக இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி என்பன இவ்வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சித்து இது தேர்தலுக்காக வகுக்கப்பட்ட திட்டமே என்று கூறியுள்ளன.

எதிர்க்கட்சிகள் இவ்வாறு கூறுவதற்கு சாட்சி பகர்வனவாகவே வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன. 

Mr. Pon. Selvarajah

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சரவணபவன் உள்ளிட்டோரும் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களுக்காக குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மீள் குடியேற்றப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் எந்த நன்மையான முன்மொழிவுகளும் உட்சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்ததுடன் இது தேர்தலுக்கான வரவு செலவுத் திட்டமே ஒழிய 2015 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டமல்ல என்று கூறியுள்ளனர்.

Mr. Suresh Premachandran

சிங்கள ஊடகங்களும் சிங்களவர்களையே அடிப்படையாகக் கொண்டு வெளிவருகின்ற ஆங்கில ஊடகங்களும் மேற்படி வரவு செலவுத் திட்டத்தை பெரிதும் வரவேற்றுள்ளன.

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள பரிசுப் பொதி என்றும் சிங்கள ஊடகங்கள் வர்ணிக்கத் தொடங்கியுள்ளன.

சிங்கள ஊடகங்கள் இவ்வாறு வர்ணிப்பதில் தவறும் இல்லை. அது குறித்து ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை.

Mr. Saravanabavan

நாட்டின் ஒட்டுமொத்த மக்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்ததான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை இலகுவாய் உணரக் கூடியதாகவே உள்ளது. அதாவது வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு மற்றும் சம்பள அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அது இடம்பெறவில்லை.

அமைச்சர் பிலிக்ஸ்  பெரேரா பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலின் பிரகாரம் "14 இலட்சம் அரச ஊழியர்களே இலங்கையில் உள்ளனர். அவர்களது வருமானத்தை மாற்றம் செய்து ஏற்றம் செய்துள்ள அரசாங்கம் தனியார் துறையினருக்கு எத்தகைய நன்மையினை பெற்றுக்கொடுத்திருக்கின்றது என்பது கேள்வி தான். 

தொழில் தருநனரால்  வழங்கப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியில் இரண்டு வீதத்தை அதிகரிக்குமாறு பரிந்துரைத்துள்ள வரவு செலவுத்திட்டம் தனியார்துறை ஊழியர்கள் மீதான அக்கறை காரணமாக அல்லாது அரச வருமானத்திரட்டலுக்கான வழி வகையே முயற்சிக்கப்பட்டிருக்கின்றது எனக் கூறலாம். 

சுமார் 65 இலட்சத்துக்கும் அதிகமான தனியார் துறை ஊழியர்களின் தொழில்  தருநர்களிடம் இருந்து  இரண்டு வீதத்திலான பணப்புரள்வினை இந்த பரிந்துரை எதிர்பார்த்திருக்கின்றது என்பதுதான் உண்மை. 

மேற்படி பரிந்துரையின் ஊடாக தொழில்தருநர்கள்  ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை."  

 Mr. Felix Perera

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கும் நீண்ட கால பிரச்சினைக்கு இவ்வரவு செலவுத்திட்ட உரையில் எதனையும் கூறாத ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்தார். 

ஆனாலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னுமே கூடாரங்களிலும் தற்காலிக முகாம்களிலும் வாழ்கின்ற நிலை குறித்தோ தமிழ் மக்களுக்கு சொந்தமான நில உரிமை குறித்தோ எதுவும் கூறவில்லை. மீள் குடியேற்றபட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் தொடர்பிலும் எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. 

President Mahinda Rajapaksa with Mr. Sampanthan

மலையகத் தோட்டத் தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றதான சம்பள விவகாரம் அடிப்படை சுகாதார பொருளாதார மேம்பாடுகள் குறித்து மறுக்கப்பட்டுள்ள மேற்படி வரவு செலவுத்திட்டத்தில் தரம் குறைந்த வீடுகளுக்கு மாற்றீடாக 50,000 வீட்டுத் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் தற்போது மலையகத்தில் உள்ள வீடுகளின் துப்பரவேற்பாடு மற்றும் மலசலகூடங்களுடன் மேம்படுத்துவதற்கு பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்துக்கு 2000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு முன் மொழிவதாக ஜனாதிபதி  கூறியுள்ளார். 

இவ்வாறு முன் மொழியப்பட்ட நிதி எப்போது உரிய இடத்தை சென்றடைந்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது எவருக்கும் தெரியாது. தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கென்று அரசாங்கம் எந்த கௌரவத்தையும் வழங்கியிருக்கவில்லை. 

ஒட்டு மொத்தத்தில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாக இது அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 



தமிழ் பேசும் மக்களைப் புறக்கணித்துள்ள அரசாங்கம் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கென மேன்மையான திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றது. அதேவேளை அவர்களின் மனங்களையும் குளிர வைத்துள்ளது.

இதனால்தான் அரசாங்கத்தின் இத்தகைய திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிறுத்தியே அமைந்துள்ளன என அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன. 

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை அது எதிர்பார்த்திருக்கவில்லை என்பதும் நகர்ப்புற வாக்காளர்கள் தேவையில்லை  என்பதும் உறுதியாகியுள்ளது. 



எப்படி இருப்பினும் வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் உள்ளபடியே நடைமுறைக்கு வருமானால் அதன் அரச ஊழியர்கள் பயன்பெறுவர். இந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே!

அத்துடன் சிங்கள ஊடகங்கள் கூறியுள்ளவாறு ஜனாதிபதியின் பரிசுப் பொதியாக மட்டுமே அது இருந்து விடக்கூடாது. அது மாத்திரமன்றி தேர்தலுக்கான ஒரு சந்தர்ப்பவாத பாதை அமைக்கப்பட்டு மக்களை ஏமாற்றுவதாகவும் அமைந்து விடாது இருக்க வேண்டும் என்பதுடன் வரவு செலவுத்திட்ட உரையில் மறுக்கப்பட்டுள்ள அல்லது மறைக்கப்பட்டுள்ள இல்லா விட்டால் மறந்து போயுள்ள விடயங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள விவாதங்களுக்குள் உள்வாங்கப்பட்டால் சிறப்பாக அமையும். 

மேலும் பிரதேச ரீதியில் அந்தந்த சமூக மற்றும் மாவட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது கட்டாயமாகும்.




நன்றி
வணக்கம்

No comments

Powered by Blogger.