Centenary Festival of the late SOUMIYAMOORTHY THONDAMAAN - அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்புப் பதிவு
வணக்கம் நண்பர்களே...!
கொள்கையில் தெளிவு! நெஞ்சிலே துணிவு! செயலிலே வேகம்! ஓயாத உழைப்பு! தளராத நம்பிக்கை இத்தகைய 5 அம்சங்களை கொண்டு தொழிலாளர்களுக்காக போராடப் புறப்பட்டவர் தொழிற்சங்க மாவீரர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.
இலங்கை மலையக மக்களின் பெரும் சொத்தாகவும், மலையக அரசியல் தொழிற்சங்க சிருஷ்டி கர்த்தாவாகவும் விளங்கியவர் அமரர் தொண்டமான்.
ஏற்றத்தாழ்வின்றி மக்களின் நன்மதிப்பையும், சர்வதேச மட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உன்னத தலைவன் என்பதை நினைவுகூறாமல் இருந்து விட முடியாது. இன்று அவரது (30.08.2013) 100வது ஜனனத்தில் அவர் மக்களுக்காக ஆற்றிய சேவைகளையும், விட்டுச்சென்ற பணிகளையும் எண்ணிப்பார்க்கிறோம்!
இலங்கைச் சரித்திரத்தில் 'சௌமியமூர்த்தி தொண்டமான்' என்ற நாமம் இன்று ஒரு தனி இடத்தை வகிக்கிறது. அவர் ஒரு மாமனிதர் ; வரலாறு கண்ட தலைவர். அவரது வாழ்க்கைச் சரித்திரம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஒரு சக்தி வாய்ந்த ஸ்தாபனத்திற்கு தலைமை தாங்கி இலங்கை வாழ் தோட்டத் தொழிலாளர் நல்வாழ்விற்கும், மறுமலர்ச்சிக்கும், அவர்களின் உரிமைகளைப் பெறவும் தன்னை முழுதாக அர்ப்பணித்தாரவர். தொழிற்சங்கவாதியாகவும் ; அரசியல்வாதியாகவும் ; ஒடுக்கப்பட்ட சமூக வளர்ச்சியாளருமாக விளங்கினார். பாராளுமன்ற அங்கத்தினராகவும் ; அமைச்சராகவும் சேவை செய்தார்.
இலங்கைவாழ் இந்திய வம்சாவழியினருக்கு இழைத்த அநீதியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினார். விசேசமாக கூறினால் இந்திய வம்சாவழியினரை "நாடற்றவர்" என்ற கூற்றிலிருந்து விடுவித்தவர் தொண்டமானே!
இவரின் விடா முயற்சியினால்தான் 'நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் விசேட சட்டம்' 1988 நவம்பர் 9ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய வம்சாவழியினர் இலங்கை நாட்டின் மலையக மக்களாயினர் ; 40 வருடங்களாக தீர்வு காணப்படாத பாரிய பிரச்சினை தீர்ந்தது! அடுத்து இவர் வெற்றி கண்ட சாதனைதான் 1989 ஏப்ரல் 26ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச் சட்டம்'. இது பிரஜாவுரிமை பெற்ற மலையக மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்ய கொண்டுவரப்பட்ட ஏற்பாடாகும்!
தோட்டப்புற மாணவர்களின் கல்வித்துறையிலும் மிக அக்கறை செலுத்தியிருக்கிறார் தொண்டமான். தோட்டப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்று நடாத்த அயராது பாடுபட்டார். சிறிபாத கல்வியியல் கல்லூரியில் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 75% இட ஒதுக்கீடு கேட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றவரும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே!
mr.Thondaman with former Prime minister of india mrs.Indra Ghandhi |
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் வாழ்க்கை
- 1960ல் பாராளுமன்ற நியமன அங்கத்தவரானார்.
- 1965ல் மீண்டும் பாராளுமன்ற நியமன அங்கத்தவரானார்.
- 1977ல் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
- 1978ல் கிராமிய கைத்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
- 1989ல் புடைவை கைத்தொழில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
- 1990ல் உல்லாச பிரயாணத்துறை அமைச்சரானார்.
- 1994ல் தேசியப் பட்டியல் பாராளுமன்ற அங்கத்தவரானார்.
- 1994ல் கால்நடை அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
- 1995ல் கால்நடை அபிவிருத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி ஏற்றார்.
- 2001.08.30ல் தேசிய தலைவர்கள் வரிசையில் அன்னாருக்கு உருவச்சிலை பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நிறுவப்பட்டது
|
தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் - கொழும்பு ; தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் - ஹட்டன் ; தொண்டமான் கலாசார மண்டபம் - றம்பொட ; தொண்டமான் விளையாட்டு அரங்கு – நோர்வூட் ஆகியன மூலம் மலையக மக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
மாவீரர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்வதில் நாமும் மலையக மக்களும் பெருமிதம் கொள்கிறோம்! அமரருக்கு எமது நிறைவான அஞ்சலியை செலுத்துகிறோம்!
நன்றி
வணக்கம்
Post a Comment