Reeds & Banyan - ஆலமரமும் நாணல்களும்
அண்மையில் என் ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன் ; "என்ன செய்கிறாய்?" என்றார் ; "teaching" என்றேன். "வேலை எப்படி?" என்றார் ; "என்னத்த சொல்றது? எப்ப பார்த்தாலும் பிரச்சினை!" என்றேன் ; "அதான் தம்பி... எப்பவுமே ஆலமரம் மாதிரி இருக்ககூடாது, சமயத்தில நாணல்புல்லாவும் இருக்க தெரியோனும்!" என்கிறார் அந்த புத்திமான்.
வணக்கம் நண்பர்களே...
"ஓர் ஆலமரம் இருந்ததாம் ; அந்த மரத்திற்கு கீழே சில நாணற்புற்களும் இருந்தனவாம் ; சிறிய மழையோ அல்லது காற்றோ வந்தால்கூட நாணல்கள் வளைந்து தலைவணங்கி நிற்குமாம் ; ஆனால் ஆலமரமோ அவ்வாறில்லையாம் ; மழையையும் காற்றையும் மதியாது எதிர்த்து நிற்குமாம் ; ஒருநாள் காற்றும் மழையும் மிக பலமாக அடிக்கவே - வளைந்து நின்ற நாணல்கள் தப்பிக்க, எதிர்த்து நின்ற ஆலமரம் அடியோடு சாய்ந்து வீழ்ந்ததாம்."
சிறுவயதில் எமக்கு பாட்டி சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. மனிதர்கள் பணிவுடன் நடக்க பழகிக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லி நிற்கிறது. வீண்சண்டை, பெரியாரை எதிர்த்தல் என்பன தீமை பயக்கும் என்பதை சொல்கிறது. நோக்கம் சரியானதுதான்! ஆனால் எடுத்துக்கொண்ட உதாரணம் சரியானதுதானா? ஆலமரத்தைவிட நாணல்கள் உயர்ந்தனவா? அல்லது ஆலமரமானது மழையையும் காற்றையும் மதிக்கத்தான் வேண்டுமா? என்பதை அலசுவதே இப்பதிவின் நோக்கம்.
ஓர் இடத்தில் ஆலமரமொன்று இருக்கின்றதென வைத்துக்கொள்வோம் ; அந்த மரத்திற்கு கீழே ஒரு பெட்டிக்கடை இருக்கிறது ; பஞ்சாயத்தும் அந்த மரத்திற்கு கீழேதான் நடைபெறும் ; அந்த மரத்திலே பல விதமான பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன ; மழையோ வெயிலோ - மனிதர்களும் விலங்குகளும் அந்த மரத்தை நோக்கிதான் ஓடிவருவர். சில வாத்தியார்கள் அந்த மரத்திற்கு கீழேதான் பாடம் நடத்துவார்கள்.
ஓர்நாள் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் அனைவரும் ஆலமரத்திற்கு கீழே தஞ்சமடைந்திருக்கிறார்கள். இப்போது அந்த மரம் திடீரென தலைசாய்த்து பணிந்தால் என்ன நடக்கும் என நினைக்கிறீர்கள்? யார் பாதிக்கப்படுவர்? மரமா? அல்லது மரத்திற்கு கீழே தஞ்சமடைந்தவர்களா?
பணிவதால் மரத்திற்கு எந்தவிதப் பாதிப்புமில்லை. அது வெயிலில் காய்கிறது. மழையில் நனைகிறது. ஆனால் தன்னை நம்பும் உயிர்களைக் காப்பதற்காக தலைவணங்காது எதிர்த்து நிற்கிறது. உண்மையில் ஆலமரம் ஒரு தியாகி. நாணலைப்போல் கோழையல்ல. ஆலமரங்கள் தோற்பதில்லை. வாழும்வரை ஜெயம். முடிவு வீரமரணம். ஆலமரங்கள் வீழ்ந்தாலும் அவற்றுக்கென தனிவரலாறு எழுதப்படும். நாணல் புற்களை யாரும் நினைத்தும் பார்க்கமாட்டார்கள். இனியாவது கதையை மாற்றுங்கள். நீங்கள்தான் நாணலாக இருந்து விட்டீர்கள். வரும் சமுதாயமாவது ஆலமரங்களாய் வளரட்டும்!
மனிதர்களில் சில ஆலைகள்...
![]() |
ஈழத்தின் தந்தை செல்வா |
தந்தை பெரியார் |
![]() |
அண்ணல் காந்தி |
![]() |
மாவீரன் நெப்போலியன் |
![]() |
மாவீரன் அலக்ஸாண்டர் |
![]() |
நேதாஜி |
![]() |
அன்னை இந்திரா |
![]() |
மதர் தெரேசா |
![]() |
யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் |
![]() |
அநுராதபுரத்து மன்னன் எல்லாளன் |
நன்றி
வணக்கம்
Post a Comment