Search This Blog

Ukkira Nedumset Chenni - "உக்கிர நெடும்சேட் சென்னி"- Fabricated Historical Novel Part (3)

அத்தியாயம் (3)



தன்னை "டேய்" என விளித்த ஆதித்தனாரை மெதுவாக நிமிர்ந்து பார்த்த உக்கிர நெடும்சேட் சென்னி "கேட்காமலில்லை மாமா ; நீங்கள் கூறுவதையும் நம்மைச்சுற்றி நடப்பதையும் நன்றாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்" என்றான்.


"என்ன பெரிதாக கவனித்துவிட்டாய்?" என்றார் மாமா. அவர் கோபம் இன்னும் தணியவில்லை!


"நம்மைச் சுற்றிலும் 18 பாண்டிய வீரர்களும் 26 சேர வீரர்களும் ஆயுதங்களுடன் உலாவிக்கொண்டிருக்கின்றனர் ; எமது பணியாளர்களாக இங்கே நடந்து திரியும் அத்தனை பேரிடமும், குறைந்தது ஒரு குறுவாளாவது இருக்குமென நினைக்கிறேன் ; நீங்கள் கூறியதுபோல் நாம் ஒருவகையில் சிறையில்தான் இருக்கிறோம்!" என விளக்கினான் மருமகன்.


சோழதளபதி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிலைமையை ஓரளவு யூகித்திருந்தாரே தவிர, இவ்வளவு சரியாக புள்ளிவிபரங்களைக் கணிக்க அவரினால் முடியவில்லை!


மனதினுள் தன் மாணவனின் திறமையை எண்ணிப் பூரித்தாலும் சூழ்நிலையை உணர்ந்தவராய் "இப்போது என்ன செய்யலாம் உக்கிரா?" என வினவினார் கலக்கத்துடன்!


சென்னியின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "மாமா... உங்கள் சோழவேந்தன் ; ஆபத்தைக் கண்டு அஞ்சுபவன் என்றா நினைக்கிறீர்கள்?" என வினவியபோது, அவன் கண்கள் பளிச்சிட்டன வீரத்தினால்!


தன் மருகனை நன்குணர்ந்த தளபதி "ஆபத்துதான் சோழனைக் கண்டு அஞ்சும்!" என பதிலளிக்கும்போது, அவரது கண்களும் பளிச்சிட்டன பெருமையினால்!



ஆதித்தனாரின் பதிலினால் மகிழ்ச்சியடைந்த சென்னி "சற்று இங்கே வாருங்கள் மாமா" என சாளரத்தின் அருகே அழைத்தான்.


பின்பு சாளரத்தின் வழியே நோட்டமிட்ட சோழன் "சேரனின் அரண்மனையைச் சுற்றிலும் சுமார் 200 குடியானவர்களின் குடிசைகள் இருக்கின்றன மாமா" என்றான்.


இவன் எதற்கு சொல்கிறானென புரியாததால் "ஆமாம் மிக அழகான குடிசைகள்" என பதிலளித்தார் மாமா.


"ஓவ்வொரு குடிசையிலும் சுமார் நான்கு வீரர்கள் தங்கலாம் மாமா" என்றான் வேந்தன்.


இப்போது புரிந்துவிட்டது மாமனாருக்கு! எத்தனையோ போர்க்களங்களைச் சந்தித்தவரும் ; தென்னிந்தியாவின் மிகச்சிறந்த தளபதியுமான ஆதித்தனாருக்கு இதுகூட புரியாதா என்ன? இருந்தும் மருமகனின் பேச்சினைக் கேட்கும் ஆவலில் வாளாவிருந்தார்!


மேலும் விளக்கமுற்பட்ட சோழவேந்தன் "இருநாட்களுக்கு முன்பே பாண்டியன் இங்கே வந்துவிட்டான் என்ற தகவலை ஒற்றர்கள் எனக்கு தெரிவித்தனர் ; நான் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ; ஏனென்றால் சேரனாலோ பாண்டியனாலோ எனக்கு தற்சமயம் ஆபத்தில்லை ; காரணம் தற்போதுள்ள அரசியல் சூழல் ; எமக்கு எவ்வாறு முழு பாரதத்தையும் ஆளவேண்டும் என்ற எண்ணமுண்டோ, அதே எண்ணம் ஆரியர்களுக்கும் உண்டு ; சேரனும் பாண்டியனும் இதனை நன்கு அறிவார்கள் ;  தற்சமயத்தில் எனக்கேதேனும் ஆபத்தென்றால், தென்னிந்திய அரசியலில் குழப்பம் வரும் ; அதனைப் பயன்படுத்தி ஆரியர்கள் ஊடுறுவப்பார்ப்பார்கள் ; சேரனோ பாண்டியனோ அதனைத் தடுக்கமுடியாது ; எனவே அவர்களின் முதற்தெரிவு என்னுடன் சமாதானமாகத்தான் இருக்கும் ; எனவேதான் நமது வீரர்களை எல்லையிலேயே விடச்சொல்லி சேரன் கேட்டுக்கொண்டதும், மறுபேச்சின்றி ஒத்துக்கொண்டேன் ; ஆனால் வரும்போதே நமது உபதளபதிக்கு உத்தரவிட்டுவிட்டேன் ; என் உத்தரவின்படி நம்முடன் வந்த 600 வீரர்களும் தற்போது மாறுவேடத்தில் நகருக்குள் பிரவேசித்து விட்டார்கள் ; அதுமட்டுமன்றி சுற்றியிருக்கும் குடிசைகளில் ஏதோ காரணங்களைக்கூறி விருந்தாளிகளாக தங்கிவிட்டார்கள் ; குடிசைகளில் தஞ்சமடைந்ததும் இரு தீப்பந்தங்களை ஒன்றுக்கொன்று செங்குத்தாக வாயிலில் நட்டுவைக்க சொன்னேன் ; அதோ எரிகிற தீப்பந்தங்களைக் கவனியுங்கள் மாமா" என்ற வேந்தன் தொடர்ந்து சொல்ல தொடங்கினான்!


தொடரும்...

No comments

Powered by Blogger.