Search This Blog

Ukkira Nedumset Chenni - "உக்கிர நெடும்சேட் சென்னி"- Fabricated Historical Novel Part (2)



அத்தியாயம் (2)





சேரமன்னரை தூதுவன் சந்தித்து சரியாக ஒரு மாதம் கழித்து, சேரமன்னரின் விருந்தினர் மாளிகையில் ஓர் அறையில், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் சோழநாட்டு தலைமை தளபதி ஆதித்தன் வெளியன். அவரது முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன!


அவ்வறையின் மத்தியில் போடப்பட்டிருந்த, அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான் "எதிர்கால தென்மண்டலாதிபதி" என தன் தாய்மாமனினால் வர்ணிக்கப்படும் சோழவேந்தன். 

அவன் மிகவும் அமைதியாக தன் வலது காலின் மேல் இடது காலினைப்போட்டு அமர்ந்திருந்தான். அவனது இடது கரத்தில் தவழ்ந்த வாளை வலது கரம் தடவி கொடுத்துக் கொண்டிருந்தது. அவனது வாளில் மின்னிய எழுத்துக்களில் 'உக்கிர நெடும்சேட் சென்னி' எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.அவனது தோரணையைப் பார்த்தால் திருமணம் நிச்சயிக்கப்படவுள்ள மணமகனைப்போல தோன்றவில்லை. ஏதோ இரையைக் கௌவ பாய முன் பதுங்கும் வேங்கையைப் போன்றிருந்தது - அவனது தோற்றம்!


அறையில் நிலவிய மௌனத்தை முதலில் கலைத்தவர் ஆதித்தனார் ;
"அரசே தங்களுக்கு நமது நிலைமை புரிகிறதா?" என கேட்டார் பவ்வியமாக.


வாள்மீது இருந்த பார்வையை விலக்காமலே, "நமது நிலைமைக்கு தற்போது என்ன மாமா?" என வினவினான் மருமகன்.


இந்த பதிலினால் சற்று நிதானமிழந்த சோழ தளபதி, ஏகவசனத்தில் பேச முற்பட்டு "நமது நிலைமைக்கு என்ன குறைச்சல் நெடுஞ்சேட்சென்னி? சுவையான உணவு ; உறங்க நல்ல இடம் ; காவலுக்கு பாண்டிய மற்றும் சேர வீரர்கள் ; நமக்கென்ன நன்றாக தூங்கலாம்!" என்றார் கிண்டலாக.


இதன் பின்னரும் சோழன் அமைதி காக்கவே, அவரே மீண்டும் தொடர்ந்தார். "சேரன் இங்கே நம்மை வரச்சொன்னபோது, நமக்கு மட்டும்தான் அழைப்பு என நினைத்தேன் ; ஆனால் நமக்கு இரு நாட்களுக்கு முன்பே நம் பரம எதிரி பாண்டியன் இங்கே வந்திருக்கிறான் ; அதுவும் படைகளுடன் ;  இதைப்பற்றி சேரன் எதுவும் கூறவுமில்லை ; அது மட்டுமன்றி...  நமது படைகளைக் கோட்டையினுள் அழைத்து வந்தால், நகர மக்கள் பீதியடைவார்கள் எனக்கூறி, நமது வீரர்களை எல்லையிலேயே தங்கவைத்தும் விட்டான் தந்திரக்காரன் ; நாம் இப்போது தனியாக சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறோம்" என்றார்.


ஆனால் சோழன் வாளின் மீதிருந்த பார்வையை இன்னும்தான் விலக்கினானில்லை! இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்ட ஆதித்தனார் "டேய் நான் கூறுவதை கேட்கிறாயா? இல்லையா?" என்றார் விசனத்துடன்! 


அவரைப் பொறுத்தமட்டில் உக்கிர நெடும்சேட் சென்னி அரசனாக நடந்துகொண்டால் மரியாதை கொடுப்பார் ; அலட்சியப்போக்குடன் செயற்பட்டால், ஏசி திருத்துவார். தாயையும் தந்தையையும் சிறுவயதிலேயே இழந்துவிட்ட சென்னியை தாய்மாமன் என்ற முறையிலும், நாட்டின் தளபதி என்ற வகையிலும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தவரவர். அவர்தான் அவனுக்கு ராஜகுரு ; கட்டைப் பிரம்மச்சாரியான அவரிடமிருந்து அன்பையோ பாசத்தையோ பெறமுடியாவிட்டாலும் ; போர் நுணுக்கங்களையும் ; ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் ; அரசியல் ராஜதந்திர நுட்பங்களையும் அளவுக்கதிகமாகவே கற்று வைத்திருக்கிறான் சோழவேந்தன். தாயின் அன்பிலும், தந்தையின் அரவணைப்பிலும் வளரவேண்டிய குழந்தை, தாய்மாமனின் பாசறையில், ஆயுதங்கள் உராய்ந்து எழுப்பும் ஓசைகளுக்கிடையே, மறவனோடு மறவனாக வளர்ந்தது!


தந்தையான சோழமகாராஜாவுக்கு ஒரு கனவிருந்தது! "சோழர்களின் புலிக்கொடியை பாரதமெங்கும் பறக்கவிட வேண்டும்" என விரும்பினார். போர்க்களத்திலேயே ஒருநாள் அவருயிரும் பிரிந்தது ; வீரப்பெண்மணியான அவனது தாயும், கைக்குழந்தையான சென்னியை தன் அண்ணணான ஆதித்தனாரிடம் ஒப்படைத்துவிட்டு கணவருடன் உடன்கட்டை ஏறிவிட்டாள்!


சிறுவயது முதலே உக்கிர நெடும்சேட் சென்னியின் பிஞ்சு நெஞ்சுக்குள் தந்தையின் இலட்சியம் உள்வாங்கப்பட்டுவிட்டது. அவனது போர்வெறிக்கு அதுவே காரணமாகவும் அமைந்துவிட்டது! 


இப்படிப்பட்ட பிண்ணனியைக் கொண்ட சோழவேந்தன் தன்னை "டேய்" என விளித்த மாமனை, மெதுவாக நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் சிறிதும் பதற்றமில்லை!






தொடரும்...

No comments

Powered by Blogger.