Search This Blog

Ukkira Nedumset Chenni - "உக்கிர நெடும்சேட் சென்னி"- Fabricated Historical Novel Part (1)



அத்தியாயம் (1)


                             
                               கி.பி 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வடபாரதத்தை ஆண்டு கொண்டிருந்த ஆரியர்களுக்கும், தென்னிந்தியாவை ஆண்ட திராவிடர்களுக்குமிடையே பெரும் போர் வெடிக்க தயாராக இருந்தது.

ஆரியர்கள் தென்னாட்டின்மீது படையெடுத்து அடிமைப்படுத்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மூவேந்தர்களிடையே வெறுப்பும் பகையுணர்ச்சியும் மண்டிக்கிடந்ததால், தென்னாட்டின் பாதுகாப்பு ஸ்திரமற்று இருந்தது.

இச்சிக்கலை தீர்க்க சில பழுத்த அரசியல்வாதிகள் முயலாமலில்லை! அவர்களிடையே முதன்மையானவர் - சேர நாட்டின் செம்மல் - மாமன்னர் 'சேரமான் குட்டுவன் வாழியாதன்'!

***

உலக அறிவும் ; அனுபவமும் ; வீரமும் ; தாய்நாட்டு பற்றும் ஒருங்கேகொண்ட சேரமன்னர், ஏனைய மன்னர்களையும் ஒன்றினைத்து ஆரியர்களை எதிர்க்கத் துணிந்தார். அதற்கான முயற்சிகளில் அவரது தூதர்களை ஈடுபடுத்தியிருந்தார். அதில் அவருக்கு ஓரளவு வெற்றியும் கிடைத்திருந்தது!

 பல்லவ மன்னர் அவருடன் உடன்பட முன்வந்தார். ஆனால் பிரச்சினை என்னவெனில், பல்லவநாடு சோழநாட்டிற்கு அடிமையாக இருந்தது. பல்லவ மன்னன் சோழருக்கு கப்பம் செலுத்திக் கொண்டிருக்கிறார். சரியாக இரு ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களுடன் நடந்த போரில், தன்நாட்டையும் முடிக்குரிய இளவலையும் இழந்திருந்தார். பின்னர் சோழநாட்டு தளபதியும் சோழவேந்தனின் மாமாவுமான 'ஆதித்தன் வெளியனினால்' பல்லவநாட்டு மணிமகுடத்தை “சோழநாட்டிற்கு கப்பம் செலுத்த வேண்டும்" எனும் நிபந்தனையுடன் திரும்ப பெற்றிருந்தார். முதுமை வாட்டிய காலத்திலும் ;  மகனை இழந்த சோகத்திலும் ; தாய்நாட்டிற்கு ஒன்றென்றவுடன் போர்க்களம் காணதுடிக்கும் வலியநெஞ்சம் படைத்த மறத்தமிழனவர்! ஏறக்குறைய சமவயதுடைய சேரனுடன் இணைய அவர் விருப்பப்பட்டாலும், சோழன் விடவேண்டுமே!  ஏனெனில் பல்லவரின் படைவளங்கள் தற்போது சோழரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சோழரை எதிர்த்து செயற்பட அவற்றினால் முடியாது, அது நடக்கவும் நடக்காது!

சேரனைப் பொறுத்தவரையில் அவரது முதுமை போருக்கு தடையல்ல, அவர் யாருக்கும் கட்டுப்பட்டவருமல்ல, அவரிடம் வலிமையான படைபலமும் இருந்தது! எனினும் ஆரியர்களைத் தனியே எதிர்ப்பது, புத்திசாலித்தனம் அல்லவென்று அவர் கருதினார். தவிர பல்லவனுக்கு அடுத்து பாண்டியரையும் அடிமைப்படுத்த துடித்துக்கொண்டிருக்கும் சோழன், அடுத்ததாக தன்மீதும் பாயகூடுமென்ற அச்சம் அவருக்கிருந்தது! எனவே அவர் தனது படைவளங்களைச் சேமிக்க விரும்பினார். அத்தோடு நின்றுவிடாது, பாண்டிய மன்னனையும் தன்னுடன் சேரசொல்லி தூதனுப்பினார். அதற்கு வேறொரு காரணமும் இருந்தது!

பாண்டியன் வலிமையான இளைஞன் ; சிறந்த நிர்வாகி ; நற்பண்புகளைக்கொண்ட அறிஞன் ; இதனை சேரன் பார்த்தும் கேட்டும் அறிந்திருந்தார். எனவே தன் ஒரே மகளான இளவரசி 'மனோ ரஞ்சிதாவை' பாண்டியனுக்கு மணம் செய்விப்பதன் மூலம், சேர மற்றும் பாண்டிய படைபலங்களை இணைத்துக்கொண்டு, பாண்டியன் தலைமையில் சோழனுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சமரசத்திற்கு வருதல் ; அதற்கவன் ஒத்துவராவிடின் போர் புரிந்து சோழனை தோற்கடிப்பதன் மூலம், உள்வீட்டு எதிரியை ஒழித்துவிட்டு, அன்னிய விரோதிகளை சந்திப்பதென முடிவு செய்தார். இதே எண்ணத்தில் தன்னை வந்து சந்திக்கும் படியும், தன் மகளின் திருமண விடயமாய் பேச விரும்புவதாயும் பாண்டியனுக்கு தூதனுப்பினார்.

 சேரன் பாண்டியனுக்கு தூதனுப்பி சரியாக எட்டு நாட்கள் கழித்து, சோழநாட்டு தூதுவன் ஒருவன் சேரமன்னரை சந்தித்தான். அவன் கொண்டு வந்த ஓலையின் சாராம்சம் இதுதான்...

“ மதிப்பிற்குரிய 
சேரநாட்டுச் செம்மல் 
அவர்களுக்கு 

வணக்கம் அரசே 

தற்போதைய சோழநாட்டு வேந்தனும் ; எதிர்கால தென்மண்டலாதிபதியும் ; என் ஏக மருகனுமான 'உக்கிர நெடும்சேட் சென்னி' அவர்களுக்கு  - தங்கள் ஏக புத்திரி ; திருநிறைச்செல்வி 'மனோரஞ்சனி' அவர்களை திருமணம் செய்துவைக்க, தங்கள் சம்மதத்தை தாழ்மையுடன் எதிர்பார்க்கிறேன்.

 இப்படிக்கு 
தங்களின் பணிவான 
சோழநாட்டு தலைமைத் தளபதி 
ஆதித்தன் வெளியன்."


 வாசித்து முடித்த சேரமன்னர், நீண்டதொரு பெருமூச்சொன்றை இழுத்து விட்டார். 'தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்ததை எண்ணி' வருந்தினார்.  தென்னகத்தின் நிலைமை மட்டுமன்றி, தன் மகளின் நிலைமையும் மோசமானதை எண்ணி கலங்கினார்.  சோழர்களை அலட்சியப்படுத்தினால் உடனடியாக போர் மூளும் என்பதை உணர்ந்ததனால் ;  வேறுவழியின்றி 'உடினடியாக சேரநாட்டிற்கு வருகை தரும்படியும் ;  இது தனது பாக்கியம் எனவும்' சோழதேசத்திற்கு செய்தி அனுப்பினார்!




தொடரும்...




No comments

Powered by Blogger.