Paladin Dr. Senpagaraman - கலாநிதி மாவீரன் செண்பகராமன்
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று ; அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவி வரத்தான் செய்கிறது ; எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம் ; அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ்வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிசிக்கின்றனர்!
மாவீரன் செண்பகராமன் |
எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாததொன்று ; அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு ; உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச் செய்தவன் - அடிபணிய வைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? ; அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?
இந்தியக் குடியரசின் உயிர்மூச்சாகத் திகழும் “ஜேய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை முதன்முதலில் உச்சரித்தவர் - வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்றுதான் பலர் கருதுகின்றனர் - அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜேய் ஹிந்த்” என்பது உண்மையே! ; ஆனால் அவருக்கு முன்பே “ஜேய் ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால் - ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
செண்பகராமன் பிள்ளை அல்லது செம்பகராமன் பிள்ளை தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார் ; மாவீரர் செண்பகராமன் என்றும் ஜேய்ஹிந்த் செண்பகராமன் என்றும் அழைக்கப்படுபவர் ; இங்கிலாந்து, ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார் ; ஹிட்லர், கெய்சர் (ஜெர்மன் மன்னர்) ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர் ; இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர்!
செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான 'புத்தன் சந்தை' என்ற ஊரில் பிறந்தார் ; தந்தை சின்னசாமிப்பிள்ளை ; தாயார் நாகம்மாள் ; இவர் இளம் வயதிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார் ; திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார் ; பின் ஐரோப்பா சென்ற செண்பகராமன் முதலில் இத்தாலியிலும் பின்னர் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகத்திலும் பயின்று பல பட்டங்கள் பெற்றார். ஐரோப்பிய மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்!
சுவிட்சர்லாந்தில் இருந்த போது இந்திய நாட்டில் ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறைகள் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார் ; பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவினார் ; 'புரோ இந்தியா' என்ற இதழைத்தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயரின் இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார் ; சீனா, தென் ஆப்பிரிகா, மியான்மர் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார் ; இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின் ' ராஜா மஹேந்திர பிரதாப்' அவர்களை அதிபராகவும் - 'மவுலானா பர்கத்' அவர்களை பிரதம மந்திரியாகவும் கொண்டு, இந்தியர்கள் தங்களே நடத்துகின்ற போட்டி அரசை 1915- ல் ஆப்கானில் நிறுவினர் ; இவ்வரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செம்பகராமன் பிள்ளை பணியாற்றினார்!
ஒருநாள் டாக்டர் செண்பகராமனும் ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் ; அப்பொழுது ஹிட்லர் ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார் ; "சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ;. இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன் ; இந்தியாவின் பாரம்பரியபெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதாவிலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார் ; டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார் ; டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன் தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ;
"வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது - எழுத்திலும் மன்னிப்பைத் தர வேண்டும்" என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன் ; அதன் படியே எழுத்தில் மன்னிப்புக்கோரினார் ஹிட்லர்!
செண்பகராமன் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில், எதிரிகள் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர் ; அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது ; தீவிர சிகிச்சைக்குப் பின் சிறிது நாளில் நலம் பெற்ற செண்பகராமனை, எதிரிகள் மீண்டும் தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள் ; அதுவே அவரை மரணப் படுக்கையில் வீழ்த்தக் காரணமாக அமைந்தது ; 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது!
யோகா பாலச்சந்திரன் என்னும் ஈழத்து பெண் எழுத்தாளர் வெகு ஆண்டுகளுக்கு முன் எழுதிய "மாவீரன் செண்பகராமன்" புத்தகத்தை சமீபத்தில் படித்தேன் ; படித்த பிறகுதான் தெரிந்தது - "நாம் எவ்வளவு பெரிய வரலாற்றை இழந்திருக்கிறோம், இன்னும் எவ்வளவு மறைக்கப்பட்டுள்ளதோ?" என்று எதிர்மறை எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை ; "செண்பகராமன் வரலாறு" - 18-19 ஆம் நூற்றண்டுதானே! இவரை எப்படி மறந்தோம் என்றும் தான் எனக்கு தெரியவில்லை? - உண்மையில் தமிழன் எங்கு சென்றுகொண்டிருக்கிறான் என்பதை நினைக்கும்போது வெக்கப்படுவதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை!
செண்பகராமண் சிலை ; காந்திமண்டபம் ; சென்னை |
நன்றி
வணக்கம்
Post a Comment