Search This Blog

Ukkira Nedumset Chenni - "உக்கிர நெடும்சேட் சென்னி"- Fabricated Historical Novel Part (4)

அத்தியாயம் (4)





தனது திட்டம் சரியாக நடந்து கொண்டிருப்பதை தளபதி ஆதித்தனாருக்கு விளக்கிய உக்கிர நெடும்சேட் சென்னி மேலும் சொன்னான் “நான் இங்கிருந்து சாளரத்தின் வழியே ஏதாவது ஒரு குடிசைக்கு, என் இலச்சினை பொறிக்கப்பட்ட அம்பினை செலுத்தினால் போதும் ; உடனடியாக நம் 600 வீரர்களும் இந்த அரண்மனையை முற்றுகையிடுவார்கள். நீங்கள் நினைத்தபடி இந்த அரண்மணை ஒரு சிறைதான் மாமா! ஆனால் நமக்கல்ல ; அந்தப்புரத்தில் தங்கியிருக்கும் சேரனுக்கும், அடுத்த விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் பாண்டியனுக்கும்தான்!" என முடித்தான்.


இந்த விளக்கத்தைக்கேட்டு முதலில் ஆச்சரியமும் பின்பு ஆனந்தமும் அடைந்த தளபதி, அதற்குமேல் ஒருமையில் பேச மனம் வராமல் "சோழவேந்தரே! தங்களின் திட்டம் மிகவும் பிரமாதம் ; அனுபவசாலியான நான் கூட இவ்வாறு யோசிக்கமாட்டேன் ; ஆனால் சிறுவிடயத்தில் தவறு செய்துவிட்டீர்கள் ; வழக்கத்திற்கு மாறாக தீப்பந்தங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக எரிவது, சேரனுக்கு சந்தேகத்தை வரவழைத்திருக்கும் ; அவன் ஒற்றர்களை ஏவி நம் வீரர்கள் இங்கிருப்பதை, இன்னேரம் அறிந்திருப்பான் என நினைக்கிறேன்!" என்று தன் மாணவனுக்கு அவன் தவறை சுட்டிக்காட்டினார்.


ஆனால் சற்றும் அசராத சோழன் "வேண்டுமென்றேதான் மாமா இவ்வாறு திட்டம் வகுத்தேன் ; நானும் தற்சமயம் யுத்தத்தை விரும்பவில்லை ; தென்னகம் முழுவதையும் நாம் ஆளவேண்டும் ; இல்லையெனில் சேரனோ அல்லது பாண்டியனோதான் ஆள வேண்டும் ; எங்கிருந்தோவரும் ஆரியக்கூட்டம் நம் தமிழர்களை ஆளக்கூடாது ; அதற்கு நான் இடமளியேன் ; எனவேதான் என் திட்டம் சேரனுக்கு புரியும்படி வடிவமைத்தேன் ; நம் வீரர்கள் நமக்கருகில் இருப்பதை சேரன் அறிந்தால், ஒரு வலிய யுத்தத்தை நம்மீது சேரனோ பாண்டியனோ திணிக்கமாட்டார்கள்!" என விளக்கினான்.


தன் சிஷ்யன் குருவான தன்னையே மிஞ்சும் வகையில் செயற்படுகிறான், என்பதை அறிந்த தளபதியின் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் படர்ந்தது.

***


சோழவேந்தனும் அவனது தளபதியும் தங்களின் திட்டங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அரண்மணை நந்தவனத்தில் தன்னந்தனியே உலவிக்கொண்டிருந்தான் பாண்டியராஜன் .


பாண்டியன் ஆட்சிப்பொறுப்பேற்ற சமயத்தில் நாட்டில் பல குழப்பங்கள் இருந்தன. சேர நாட்டுடன் தொடர்புகளில்லை ; சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில், பல்லவர்களுக்கு உதவப்போய் சோழனின் விரோதத்தை பெற்றுக்கொண்டமை ; உள்நாட்டில் பொருளாதார மந்தம் - இவ்வாறு பல சிக்கல்களுடன்தான் மணிமகுடத்தை சூடிக்கொண்டான் பாண்டியன்!


சிறந்த நிர்வாக திறமையும் ; அஞ்சாநெஞ்சமும் ; நேர்மையும் கொண்ட பாண்டியனுக்கு இயல்பிலேயே நிதான குணமும் வாய்த்திருந்ததால், உள்நாட்டு பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக்கொண்டான். நாட்டு மக்களும் அவனை மிகவும் நேசித்தனர் ; சோழனைத் தவிர, ஏனைய மன்னர்களுக்கும் அவனைப் பிடித்திருந்தது ; குறிப்பாக சேரமன்னருக்கு! ;   சேரநாட்டிற்கும் பாண்டிய தேசத்திற்குமிடையில் வர்த்தக தொடர்புகள் உருவாகின.


 இதனால் தென்னிந்தியாவில் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்துவந்த சோழதேசத்திற்கு எதிராக பாண்டிய நாடு எழுந்து நின்றது! சோழதேசம் போரியல் துறையில் வளர்ந்தால், பாண்டியநாடு பொருளாதாரத்தில் முதல்நிலையடைந்தது!


சொந்தநாட்டு பிரச்சினைகளை திறமையாக தீர்த்த பாண்டியன், தற்சமயம் தென்மண்டலத்தைப் பற்றி யோசித்தவாறு நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருந்தான்!


ஆரியர் படையெடுத்தால் எவ்வாறு முறியடிப்பது? அடிக்கடி தொல்லைகொடுக்கும் சோழனை எவ்வாறு அடக்குவது? சேரநாட்டுடன் தொடர்புகளை எவ்வாறு பேணுவது? சேர இளவரசியை திருமணம் செய்தால் நிரந்தர உறவை ஏற்படுத்த முடியும்! இவ்வாறு அந்த உத்தமன் நினைத்தான்.


இந்த நினைவுகளினால் தன்னைப் பின்தொடரும் மனிதஉருவை கவனிக்கத் தவறிவிட்டான்!




தொடரும்...

No comments

Powered by Blogger.